×

மக்கள் எதிர்ப்பை மீறி திறந்ததால் ஆத்திரம் டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகை: திடீர் சாலை மறியலால் பரபரப்பு

அம்பத்தூர்: சென்னை முகப்பேர், ரெட்டிப்பாளையம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், கம்பெனிகள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு வாவின் சந்திப்பு வழியாக செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இந்த சாலையில் உள்ள ரெட்டிப்பாளையம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதன் பிறகு,  அந்த பகுதியில் குடிமகன்களின் தொல்லையால், பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருவதாக குற்றம்சாட்டுகின்றனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி  அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் 12.30 மணிக்கு பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக திரண்டு வந்தனர்.

பின்னர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலை-ரெட்டிப்பாளையம் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  தகவலறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்திய பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்களிடம்  போலீசார், ‘‘அதிகாரிகளுடம் பேசி உங்களது கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும்’’ என உறுதி அளித்தனர். இதனை ஏற்று மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அண்ணா நகர்: கோயம்பேடு, நெற்குன்றம், அபிராமி நகர் 5வது தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கடந்த சில தினங்களாக புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு பணிகள் நடந்து வருகிறது.

இதற்கு அப்பகுதி பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், அதிகாரிகள் அதை அலட்சியப்படுத்தி வந்தனர். இந்நிலையில் அபிராமி நகர் பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திடீரென டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று போலீசார் உறுதி அளித்ததன்பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags : Women ,Siege ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது