×

வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முற்றுகை

கள்ளக்குறிச்சி, மார்ச் 7: கள்ளக்குறிச்சி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பிடிஓ அலுவலகத்ைத கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எம்பி தேர்தலை புறக்கணிக்க போவதாக ஆவேசத்துடன் தெரிவித்தனர்.   கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அணைகரைக்கோட்டாலம் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இக்கிராமத்தில் சுமார் 14.80 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற வலியுறுத்தி ஏற்கனவே கிராம மக்கள் சார்பில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமியிடம் புகார் மனு அளித்துள்ளனர். நேற்று முன்தினம்(5ம் தேதி) ஆக்கிரமிப்பை அகற்றுவதாக தெரிவித்தனர். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பிடிஓ நாராயணசாமியிடம் கிராம மக்கள் முறையிட்டுள்ளனர். அப்போது, என்னை சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு பணி மாறுதல் செய்துள்ளனர். எனவே ஆக்கிரமிப்பு அகற்றுவது சம்பந்தமாக நான் எந்த பணியும் செய்ய முடியாது என பிடிஓ கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பிடிஓ நாராயணசாமியை கண்டித்து 50க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க முன் வரவில்லை என்றால் 300 குடும்பத்தினரும் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவைகளை கையில் வைத்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) கல்யாணசுந்தரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சபி, கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ  இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்க மறுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அலுவலகத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்திற்கு பிறகு ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags : Siege ,Regional Development Officer ,
× RELATED முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்தை கைது செய்ய ஆணை!!