×

ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஓழிப்பு போலீசார் சோதனை: கட்டுக் கட்டாக பணம் சிக்கியது

சென்னை, மார்ச் 7: கும்மிடிப்பூண்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கியது. கும்மிடிப்பூண்டி அடுத்த கன்னியம்மன் கோயில் அருகே கும்மிடிப்பூண்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்களது வாகனங்களுக்கு பதிவு, எப்சி பதிவு செய்தல், லைசன்ஸ் வாங்குதல் உள்ளிட்ட தேவைகளுக்காக தினமும் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தின் அருகில் உள்ள கடைகள் மற்றும் புரோக்கர்கள் மூலம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் சான்றிதழ் பெறுவதற்காக வரும் பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக, லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்ேபரில் திருவள்ளூர், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சிவபாதசேகர் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 3.30 மணியளவில் மேற்கண்ட அலுவலகத்துக்கு வந்தனர்.

அங்கிருந்தவர்களை வெளியே செல்லாமலும், வெளியே இருந்து யாரும் உள்ளே செல்லாமலும் கதவுகளை இழுத்து மூடினர். தொடர்ந்து அலுவலக வளாகத்தில் நிறுத்தியிருந்த வாகனங்கள் மற்றும் பதிவு செய்வதற்காக நிறுத்தி இருந்த புதிய வாகனங்களை சோதனை நடத்தினர். அலுவலகத்தில் 6 மணி நேரத்துக்கு மேல் நடத்திய சோதனையில் ரூ1.85 லட்சம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முருகேசனிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரிக்கின்றனர். கும்மிடிப்பூண்டியில் கடந்த 10 நாட்களில் மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் தொடர் சோதனையால் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Tags : RTO ,Office: Money Strike ,
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு