×

ஒரு வருடமாக கிடப்பில் உள்ள கொடுக்கூர்- எடையூர் சாலை பணியை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை

விருத்தாசலம், மார்ச் 7: விருத்தாசலம் அருகே கொடுக்கூர், பெரம்பலூர் மற்றும் எடையூர் ஊராட்சிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். எடையூரிலிருந்து, பெரம்பலூர் மற்றும் கொடுக்கூர் வரை உள்ள சுமார் 5 கிலோ மீட்டர் சாலை கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதனால் சாலையை பயன்படுத்துவதில் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்து வந்தனர். இந்த சாலை வழியாக டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம் மற்றும் அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் வாகனங்களில் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு செல்லவும், பள்ளிக்கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக விருத்தாசலம், வேப்பூர் செல்லவும் இந்த சாலை மிகவும் இன்றியமையாததாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் பிப்ரவரி 28ம் தேதி பிரதமமந்திரி கிராம சாலை திட்டத்தின் மூலம் கொடுக்கூர் மெயின் ரோட்டில் இருந்து எடையூர் வரை 4 கிலோ மீட்டர் வரை ரூ.1கோடியே 34லட்சம் செலவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் சாலைப்பணி தொடங்கப்பட்டது. ஆனால் 1 வருடம் முடிவடைந்த நிலையிலும், சாலைப்பணி கிடப்பில் போடப்பட்டு எந்தப்பணியும் நடைபெறாமல் உள்ளது. இதனால் முதற்கட்டப்பணியாக செம்மண் கலந்து ஜல்லிகள் போடப்பட்டு அமைக்கப்பட்ட சாலை, தற்போது மிகவும் பழுதடைந்து கிடப்பில் உள்ளது. மேலும் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் சாலையில் செல்ல முடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதுகுறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகங்களில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையடுத்து கொடுக்கூர், பெரம்பலூர், எடையூர் சாலையை தரமாகவும், விரைவாகவும் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : stay ,
× RELATED பாலாற்றில் ஆந்திரா அணை கட்ட தடையாணை பெறுக: வைகோ வலியுறுத்தல்