×

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை சேதப்படுத்தும் சுற்றுலா பயணிகள்: கண்காணிக்க முடியாமல் தொல்லியல் துறை திணறல்

மாமல்லபுரம், மார்ச் 7: மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்களை சேதப்படுத்தும் சுற்றுலாப் பயணிகளை, கண்காணிக்க முடியாமல் தொல்லியல் துறை திணறி வருகின்றனர். சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் உலகப் புகழ்பெற்ற கடற்கரை கோயில், ஐந்து ரதங்கள், வெண்ணெய் உருண்டை கல், அர்ஜுனன் தபசு, முகுந்தராயர் மண்டபம் உள்பட ஏராளமான பல்லவர் கால சிற்பங்கள், புராதனச் சின்னங்கள் உள்ளன. இவற்றை மத்திய தொல்லியல் துறை நிர்வகித்து வருகிறது. இவற்றை பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு பார்வையிட அனுமதிக்கப்படுகின்றன. அதில் சிலர், புராதனச் சின்னங்களின் மீது ஏறி செல்பி எடுத்தல், பெயர்களை எழுதி கிறுக்குதல், மன்னர்களின் சிலை உருவங்களில் பெயின்ட் தீட்டுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுபோன்று தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் சிற்பங்களையும், சின்னங்களையும் சேதப்படுத்தினால் கடும் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தொல்லியல் துறை அறிவித்தது. ஆனாலும், போதிய கண்காணிப்பு இல்லாததால் சிலைகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வணங்குதல், பெயர்களை எழுதுதல் போன்ற செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தொல்லியல் துறை நிர்வாகம் முக்கிய புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை கல் ஆகியவற்றை மட்டும் பராமரிக்கிறது. ஆனால், பல இடங்களில் திறந்தவெளியில் உள்ள சிற்பங்கள், சின்னங்களை கண்டு கொள்வது இல்லை.

இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அவற்றை கடவுள் சிலைகள் என நினைத்து மஞ்சள், குங்குமம் பூசி வழிபட்டு விட்டு செல்கின்றனர். சிற்பங்களின் தொன்மை பாதிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் வழிபாடு நடத்த தடை என்று கூறி பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு வழி வகுக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, தொல்லியல் துறை நிர்வாகம் மாமல்லபுரம் நகரத்தில் தொன்மையான சின்னங்கள் அமைந்துள்ள இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Tags : department ,Mamallapuram ,
× RELATED சென்னையில் பேருந்து நிறுத்தங்களில்...