×

அம்மன் கோயில்களில் மயான கொள்ளை

திருவள்ளூர், மார்ச் 7: திருவள்ளூர் அடுத்த புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்பட பல்வேறு அம்மன் கோயில்களில் மயான கொள்ளை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவள்ளூர் அடுத்த புட்லூர் ராமாபுரம் கிராமத்தில் பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரியையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு மயான கொள்ளை உற்சவம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் இரு நாட்களுக்கு முன் காப்பு கட்டி விரதம் இருந்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் உற்சவர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா நடைபெற்றது. மயான கொள்ளை உற்சவத்தையொட்டி நேற்று மதியம் கோயில் குளம் அருகே உள்ள மைதானத்தில் சிம்ம வாகனத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு சென்று நிறைவேற்றினர்.

இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மன் மீது சுண்டல், கொழுக்கட்டை ஆகியவற்றை போட்டு வழிபட்டனர். இதில், திருவள்ளூர், அரக்கோணம், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல், பேரம்பாக்கம் அங்காளபரமேஸ்வரி அம்மன், அரண்வாயல் அங்காள பரமேஸ்வரி அம்மன் உட்பட பல்வேறு அம்மன் கோயில்களில் மயான கொள்ளை உற்சவம் நடைபெற்றது.
திருத்தணி: திருத்தணி பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானச் சூறை பிரம்மோற்சவ விழா, கடந்த 4ம் தேதி பெரியாண்டவர் விழாவுடன் துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று மயானச்சூறை நடந்தது. நேற்று மதியம் உற்சவர் அம்மன்  சிங்க வாகனத்தில்  எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக  சென்று திருத்தணி நந்தி ஆற்றின்கரையில் எழுந்தருளினார். பக்தர்கள் அலகு குத்தியும்,  டிராக்டரில் உற்சவர் அம்மனை ஊர்வலமாக இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மாலை 5 மணிக்கு ஆற்றில் மயானச்சூறை நடந்தது. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சவர் அம்மன் மீது காய்கறிகள், கொழுகட்டை, சுண்டல் போன்றவற்றை வீசி எறிந்து நேர்த்திக்கடனை  செலுத்தினர். இன்று முதல் 14ம் தேதிவரை  தினமும் இரவு ரிஷபம், அன்னம், யானை, குதிரை, புலி, கேடயம் போன்ற வாகனங்களில் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

Tags : robbery ,temples ,Amman ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு