×

கும்மிடிப்பூண்டி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

* கத்தை கத்தையாக பணம் சிக்கியது * அதிகாரியிடம் விசாரணை
கும்மிடிப்பூண்டி, மார்ச் 7: கும்மிடிப்பூண்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கியது. கும்மிடிப்பூண்டி அடுத்த கன்னியம்மன்கோவில் அருகே கும்மிடிப்பூண்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை உள்ளடக்கிய கிராமபுற மக்கள் தங்களது இரு சக்கர வாகனங்கள், கார், லாரி மற்றும் பள்ளி வாகனங்களுக்கு எப்சி பதிவு செய்தல், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு லைசன்ஸ் வாங்குதல் உள்ளிட்ட தேவைகளுக்காக நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.  இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அருகில் உள்ள கடைகள் மற்றும் அங்குள்ள புரோக்கர்கள் மூலம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் சான்றிதழ் பெறுவதற்காக வரும் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெறுவதாக, லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்ேபரில் திருவள்ளூர், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சிவபாதசேகர் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 3.30 மணியளவில்  வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர், அலுவலகத்துக்குள் இருந்தவர்கள் வெளியே செல்லாமலும், வெளியே இருந்து யாரும் உள்ளே செல்லாமலும் அலுவலக ஷட்டரை இழுத்து மூடினர். தொடர்ந்து அலுவலக வளாகத்தில் நிறுத்தியிருந்த வாகனங்கள் மற்றும் பதிவு செய்வதற்காக நிறுத்தியிருந்த புதிய வாகனங்கள் ஒன்று விடாமல் சோதனை நடத்தினர். மேலும், அலுவலகத்தில் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் சோதனை நடத்தினர்.  இந்த சோதனையில் கத்தை கத்தையாக ரூ. 1.85 லட்சம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முருகேசனிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டியில் கடந்த 10 நாட்களில் மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் தொடர் சோதனையால் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Tags : Gummidipoitti RTO Office ,vigilante police ,
× RELATED தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை