×

ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு ஜூன் 2ம் தேதி நடக்கிறது

புதுச்சேரி, மார்ச் 6: புதுச்சேரி ஜிப்மரில் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு வரும் ஜூன் 2ம் தேதி நடைபெறுகிறது. தேர்வெழுத விரும்புவோர் இன்று முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜிப்மர் இயக்குனர் மற்றும் டீன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடத்தப்படுகிறது. இத்தேர்வு ஆன்லைன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி வரும் கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூன் 2ம் தேதி காலை, மாலை என இரு பிரிவுகளாக நடக்கிறது. எம்பிபிஎஸ் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் (www.jipmer.puducherry.gov.in) மூலமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான பதிவு இன்று (6ம்தேதி) காலை 11 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து வரும் ஏப்ரல் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மே 20ம் தேதி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடந்த ஆண்டில் 1,97,745 பேர் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்தாண்டில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு: எம்பிபிஎஸ் படிப்புக்கு மொத்தமுள்ள 200 இடங்களில் புதுச்சேரி ஜிப்மருக்கு 150 இடங்களும் காரைக்கால் ஜிப்மருக்கு 50 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் வழக்கமாக பின்பற்றும் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதோடு, சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி அனைத்திந்திய பிரிவில் 13 இடங்கள், புதுச்சேரி மாணவர்களுக்கான பிரிவில் 4 இடங்கள் என மொத்தம் 17 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 

Tags : entry ,JIPMER MBBS ,
× RELATED நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை...