×

விளைநிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து 3வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

பள்ளிபாளையம், மார்ச் 6: விவசாய விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்கும் பணியினை முற்றிலும் கைவிட வலியுறுத்தி  மாதிரி மின்கோபுரத்தை அகற்றி வீசும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை முழுமையாக கைவிட கோரி பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சாமண்டூரில் விவசாயிகள் கூட்டமைப்பினர் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த 3ம் தேதி முதல் தொடங்கியுள்ளனர். நேற்று 3வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உடல் சோர்வடைந்த நிலையில், உண்ணாவிரத பந்தலில் கட்டில் போட்டு படுத்த நிலையில் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ரவீந்திரன் பேசியதாவது: விளைநிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி 3 ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விளைநிலங்கள் வழியாகத்தான் மின்கோபுரம் அமைப்போம். கேபிள் வழியாக மின்சாரம் கொண்டு செல்வோம் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியும், மாநில அரசும் பிடிவாதமாக செயல்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவது, கைது செய்வது, சிறையில் அடைப்பது என அடக்குமுறையின் மூலம் அராஜகங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி மின்சாரத்துறை அமைச்சர் அழைக்கிறார். கோரிக்கையை விட்டு விட்டு பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தில் ஒரு மின் கோபுரத்தை அமைத்துவிட்டால், அந்த நிலத்தின் மதிப்பு 10 லட்சமாக குறைந்து விடுகிறது. அந்த குடும்பம் தலைமுறை தலைமுறையாக உழைத்த, பாதுகாத்த சொத்தை இழக்கும் அவலநிலை குறித்து பேசுவதில்லை. நிலத்திற்கான நஷ்டத்தை சேர்த்து கொடுப்பதாக கூறுகிறார். இது அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையாக தெரியவில்லை. கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்ல அதிக செலவாகும் என அவர் தெரிவிக்கிறார். நான்கு முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். நான்கு முறையும் இதைத்தான் கூறினார். கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு சென்றால் செலவாகும் என்கிறார். எத்தனையோ திட்டங்களுக்கு செலவிடும் அரசு விவசாய விளைநிலங்களை பாதுகாக்க செலவிடுவதில் என்ன இழப்பு ஏற்பட்டு விடும். எனவே விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும் வகையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் உடல்நிலையை தனியார் மருத்துவர் பரிசோதித்தார். அப்போது, விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் உயர்மின் கோபுரங்களை அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி போராட்ட பந்தல் முன் காட்சிக்காக அமைத்திருந்த மாதிரி கோபுரத்தை அங்கிருந்த விவசாயிகளும், விவசாய அமைப்பின் நிர்வாகிகளும் தூக்கிச்சென்று வீசினர்.

Tags :
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்