×

மாவட்டத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்

காவேரிப்பட்டணம், மார்ச் 6:மகா சிவராத்திரியை முன்னிட்டு, காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோயில் விழாவில், விமான அலகு குத்தி வானில் ெதாங்கியபடி வந்த பக்தர்கள், குழந்தைகளை தூக்கிச்சென்று அம்மன் பாதத்தில் வைத்து தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவில் உள்ள அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் கோயிலில்,  மகா சிவராத்திரி மற்றும் மயான கொள்ளை விழா, கடந்த 4ம் தேதி அங்காளம்மன் கோயிலில் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 6 மணியளவில் முகவெட்டு எடுத்து ஆற்றங்கரை செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 6 மணி முதல் 9 மணி வரை அம்மன் ஸர்வ அலங்கார தரிசனம், பக்தர்கள் அலகு குத்தியும், உடல் முழுவதும் எலுமிச்சம் பழங்களை குத்தியபடி வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். 50க்கும் மேற்பட்டவர்கள் காளி வேடமணிந்து வந்தனர். காலை 9 மணியளவில் பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு மயனம் செல்லுதல் நிகழ்ச்சியும், மதியம் 3.30 மணிக்கு திருத்தேர் மயானம் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடந்தது.

இவ்விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளம்மன் ஊர்வலமாக புறப்பட்டு, காவேரிப்பட்டணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அப்போது, விமான அலகு குத்தியவாறு 100 அடி தூரத்திற்கு பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி வந்து சாமிக்கு தீப ஆராதனை மற்றும் மலர் தூவி வணங்கி சென்றனர். மேலும், அந்தரத்தில் தொங்கியபடி குழந்தைகளை தூக்கி வந்து அம்மன் பாதத்தில் குழந்தைகளை வைத்து வழிபட்ட காட்சி, அங்கு கூடியிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து தேர் தென்பெண்ணை ஆற்று பாலத்தை கடந்து, ஆற்றங்கரைக்கு சென்றடைந்தது. தென்பெண்ணை ஆற்று பாலத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்ததால், இவ்வழியே செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் வாகனங்கள், காவேரிப்பட்டணம் நகருக்குள் வராமல் தேசியநெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. இந்த திருவிழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இன்று(6ம்தேதி) காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டை பூங்காவனத்தமன் கோயிலில் மயான சூறை திருவிழா நடைபெறுகிறது.

ஓசூர்:  ஓசூர் அடுத்த பாகலூர் அருகே சூடாபுரம் கிராமத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி கோயிலில் மகாசிவராத்திரியையொட்டி தேராேட்ட விழா நேற்று நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தேரோட்டம் நடைபெற்றது.
இத்திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து ெகாண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். இதனை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடக, ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
 
தேன்கனிக்கோட்டை:  தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மாதேஸ்வரன் கோயிலில் மஹாசிவராத்தியை முன்னிட்டு நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது. ரோஜா, ஜெர்பரா பூக்களால் அலங்கரிக்கப்பட் தேரில் மாதேஸ்வரசுவாமியை அமரவைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவிழாவில் அகலகோட்டை, கல்பாலம், ஜவளகிரி, பாலதோட்டனப்பள்ளி  போன்ற சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் இழுத்து கோயிலை சுற்றி வலம் வந்தனர். விழா ஏற்பாடுகளை திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags : festival ,Maha Sivarathri ,district ,
× RELATED மானாமதுரையில் நள்ளிரவில் களைகட்டிய...