×

மண்ணச்சநல்லூர் அருகே மாடக்குடியில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் 750 குடும்பத்தினர்

* வருவாயை தந்தும் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை..   * கண்டுகொள்ளுமா ஊராட்சி நிர்வாகம்?

மண்ணச்சநல்லூர், மார்ச் 6: மண்ணச்சநல்லூர் அருகே மாடக்குடி ஊராட்சியில் 750 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் ஓராண்டுக்கு மேல் அடிப்படை வசதியின்றி தவித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வருவாய் அனைத்தையும் எடுத்துக்கொள்ளும் ஊராட்சி நிர்வாகம் இப்பகுதி பொதுமக்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என்று இப்பகுதி மக்கள் விரக்தியில் உள்ளனர். மண்ணச்சநல்லூர் அருகே அமைந்துள்ளது மாடக்குடி ஊராட்சி. இந்த ஊராட்சியில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. இதில் 2வது வார்டில் குடித்தெரு, உப்பிலியத்தெரு, போக்குவரத்து நகர் உள்ளிட்ட 3 தெருக்கள் உள்ளன. இந்த வார்டில் மொத்தம் 750 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாடக்குடி ஊராட்சியின் மொத்த வருவாயில் பெரும்பான்மையான வருவாய் இந்த வார்டில் இருந்துதான் கிடைக்கிறது.

இந்த வார்டுக்குட்பட்ட பகுதியில் சுமார் ஆயிரம் பனை மரங்கள், 500 புளியமரங்கள், 500 தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு கிடைக்கும் வருவாய் அனைத்தும் ஊராட்சிக்கு செல்கிறது. ஆனால், அந்த வருவாயில் இருந்து 2வது வார்டு பகுதிக்கு இதுவரை எந்த ஒரு வளர்ச்சி பணியும் மேற்கொள்ளவில்லை என்று இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூடி சேதமடைந்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. ஆனால், இதுவரை அந்த நீர்த்தேக்க தொட்டியின் மூடி சரி செய்யப்படவில்லை. இதனால் தண்ணீர் தொட்டியில் பறவைகள், விலங்குகள் அசிங்கம் செய்து விடுகின்றன. இப்பகுதி மக்கள் அந்த குடிநீரைத்தான் குடிக்க வேண்டி உள்ளது. சில சமயம் அந்த குடிநீர் தொட்டியில் பறவைகளும் குரங்குகள் போன்ற விலங்குகளும் உள்ளே விழுந்து இறந்து விடுகின்றன. இது தெரியாமல் அந்த குடிநீரை குடிப்பதால் பொதுமக்கள் நோய் தாக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோல் இப்பகுதியில் சாலைகள், தெருவிளக்குகள் பராமரிக்கப்படாமல் உள்ளன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடந்த ஓராண்டாக இக்கட்டான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். ஊராட்சியின் பெரும்பாலான வருவாய் இந்த வார்டில் இருந்துதான் கிடைக்கிறது. ஆனால் இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாமல் ஊராட்சி நிர்வாகம் நடந்துகொள்வதால் இந்த ஆண்டு மரங்கள் ஏலம் நடத்துவதற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். வருவாயை கொடுத்துவிட்டு எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் தவிக்கும் மாடக்குடி 2வது வார்டு பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம்தான் தலையிட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வளர்ச்சி பணிகளையும் அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : families ,Mannachanallur ,
× RELATED ஊரடங்கால் வறுமையில் சிக்கிய சுற்றுலா...