×

அகில இந்திய கைப்பந்து போட்டி பிபிசிஎல், கேஎஸ்இபி அணிகள் சாம்பியன்

கிருஷ்ணகிரி,  மார்ச் 6: பர்கூரில் நடந்த அகில இந்திய அளவிலான கைப்பந்து போட்டியில்  ஆண்கள் பிரிவில் பிபிசிஎல் அணியும், பெண்கள் பிரிவில் கேஎஸ்இபி அணியும்  முதலிடம் பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு மகளிர்  மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், பர்கூர் கைப்பந்து கழகம்  சார்பில், 14வது அகில இந்திய கைப்பந்து போட்டி, கடந்த மாதம் 25ம் தேதி  தொடங்கி நேற்று முன்தினம்(4ம் தேதி) இரவுடன் நிறைவடைந்தது. ஆண்கள்,  பெண்கள் என இரு பிரிவுகளிலும் நடத்தப்பட்ட இந்த போட்டியில் இந்தியாவின்  பல்வேறு பகுதிகளில் இருந்து கைப்பந்து அணிகள் பங்கேற்றன. மின்னொளியில்  நடத்தப்பட்ட இந்த போட்டியை காண கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மாவட்டங்கள்  மட்டுமின்றி, அண்டைய மாநிலங்களாக கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும்  ஏராளமானோர் குவிந்தனர். இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் அணியும்,  கேரளா மாநில மின்சார வாரிய அணியும் மோதின. இதில் 30-28, 26-24, 25-16 என்ற  புள்ளி கணக்கில் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் அணி வெற்றி பெற்று  முதலிடத்தையும், கேரளா மாநில மின்சார வாரிய அணி இரண்டாம் இடத்தையும்,  ஐசிஎப் அணி மூன்றாமிடத்தையும், இந்திய கடற்படை அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. இதேபோல், பெண்களுக்கான பிரிவில் கேரளா மாநில மின்சார  வாரிய அணியும், கிழக்கு ரயில்வே அணியும் மோதின. இதில் 13-15, 16-25, 16-25  என்ற புள்ளி கணக்கில் கேரளா மாநில மின்சார வாரிய அணி வெற்றி பெற்று முதலிடத்தையும், கிழக்கு ரயில்வே அணி இரண்டாம் இடத்தையும், தெற்கு ரயில்வே  அணி மூன்றாமிடத்தையும், கேரளா போலீஸ் அணி நான்காம் இடத்தையும் பிடித்தன.பரிசளிப்பு விழாவிற்கு பர்கூர் கைப்பந்து கழக சேர்மன் தனபாலன் தலைமை  வகித்தார். தலைவர் அசோகன், கவுரவ தலைவர் வெற்றிச்செல்வன், செயலாளர் தங்கமணி  முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு  கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரங்கப்பன்,  துணை சேர்மன்கள் பாலன், துரைஸ் திம்மராயன், பொருளாளர் ரவி, துணை  பொருளாளர்கள் சுகுமாறன், ரங்கப்பன், துணைத்தலைவர்கள் துரைஸ் ராஜேந்திரன், திம்மிசெட்டி, சம்பத்குமார், துணை செயலாளர்கள் செந்தில்குமார், முருகன்,  மக்கிடி ராஜேந்திரன், சின்னப்பன், பாலாஜி, துணை பொருளாளர்கள் வெங்கடேசன்,  யுவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.  


Tags : Indian Volleyball Championships ,BCCL ,KSPE Teams Champion ,
× RELATED அகில இந்திய கைப்பந்து போட்டி பிபிசிஎல், கேஎஸ்இபி அணிகள் சாம்பியன்