×

ஆழத்தை குறைத்து போர்வெல் அமைத்ததில் மோசடி புகார் ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவு

சிவகங்கை, மார்ச் 6:  சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சிறு மின் விசை பம்புகள் அமைக்க போடப்பட்ட ஆழ் குழாயில்(போர்வெல்) ஆழத்தை குறைத்து முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றிய கண்மாய்கள் 4ஆயிரத்து 871, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 968 கண்மாய்கள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்கள், பேரூராட்சிகளில் குளத்து நீரே குடிநீராக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் அனைத்து நீர் நிலைகளும் நிறைந்து காணப்படும். நவம்பரில் மழை பெய்வது முடிவடைந்து மீண்டும் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் மட்டுமே மழை தொடங்கும் என்பதால் குளங்கள், கண்மாய்களில் இருக்கும் நீர் 6 மாத தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் கடும வறட்சி, அதிகப்படியான வெப்பத்தால் இருக்கும் மழை நீரும் விரைவாகவே வற்றியது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து இடங்களிலும் ஆழ்குழாய்( போர்வெல்) சிறு மின் விசை பம்பு அமைக்கப்படுகிறது.
 
ஒரே தெருவில் இரண்டு, மூன்று ஆழ்குழாய் கூட அமைக்கின்றனர். ஆனால் இந்த நீரை யாரும் குடிநீருக்கு பயன்படுத்த முடியாது. நேரடியாக இந்த நீரை குடிநீராக பயன்படுத்தினால் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இருப்பினும் சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்காமல் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆழ்குழாய்கள் நீர் இல்லாததால் பயன்பாடில்லாமல் உள்ளன. இங்கு காணப்பட்ட மோட்டார்களையும் உள்ளாட்சி அமைப்பு சார்பில் கழற்றி சென்று விட்டனர். தற்போது காட்சி பொருளாக மட்டுமே உள்ள இந்த ஆழ்குழாய்களில் கூடுதல் ஆழத்தில் போர்வெல் போடுவதாக கூறி விட்டு மிகக்குறைவான ஆழம் மட்டுமே போர் போட்டதுதான் நீர் இல்லாததற்கு காரணம் என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

அலட்சிய பதில்
விவசாயிகள் சங்க பிரதிநிதி ஒருவர் கூறியதாவது: பல கிராமங்களில் நீர் வராத ஆழ்குழாய்களில் இருந்து மோட்டாரை கழற்றி சென்றது, பின்னர் அவைகள் காணாமல் போனதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. பல இடங்களில் கழற்றி செல்லப்பட்ட மோட்டார்களை காணவில்லை என ஊராட்சி நிர்வாகங்களே அலட்சியமாக பதிலளித்தது. ஒரு கிராமத்தில் வீட்டில் 100 அடி போர்வெல் போட்டிருந்தால் அந்த போரில் நீர் இருக்கிறது. அதன் அருகிலேயே அரசு சார்பில் அதே 100அடி போட்டதாக கூறப்படும் இடங்களில் நீர் இல்லை. அப்படி எனில் குறைவான ஆழத்தில் போர்வெல் போட்டு மோசடி செய்துள்ளனர் என சந்தேகம் எழுந்தது. இது குறித்து உண்மையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Tags : Collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...