சுதந்திர போராட்ட வீரர் ஜார்ஜ் ஜோசப் நினைவு தினம் அனுசரிப்பு

மதுரை, மார்ச் 6: கேரள மாநிலம் செங்கனூரைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப், வக்கீல் தொழிலுக்காக கடந்த 1909ல் மதுரையில் குடியேறினார். தேசப்பிதா காந்தியடிகளின் நண்பர். மோதிலால் நேருவின் குடும்பத்திற்கும் நெருக்கமானவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து போராடினார். மில் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பெற்றுத் தந்தார். சிறந்த எழுத்தாளர்; பத்திரிகையாளர். தினமும் சட்டையில் ரோஜாப்பூவை வைத்ததால், இவரை ‘ரோசாப்பூ துரை’ என மதுரை மக்கள் அழைத்தனர். 1938 மார்ச் 5ல் மதுரையில் மறைந்தார். மறைந்த முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கனின் முயற்சியால், மதுரை யானைக்கல்லில் ஜார்ஜ் ஜோசப்புக்கு சிலை நிறுவப்பட்டது.நேற்று இவரது 81வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில துணைத் தலைவர் நன்மாறன், மாவட்ட நிர்வாகிகள் அலாவுதீன், ஜான்சன், ஜெயச்சந்திரன், பேராசிரியை தஸ்ரீப் ஜகான், சம்சுநிஷா, ஜான் உள்ளிட்ட பலர் யானைக்கல்லில் உள்ள ஜார்ஜ் ஜோசப் சிலைக்கு மரியாதை செய்தனர். மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் மாவட்ட நிர்வாகி நயினார் முகம்மது தலைமையில், மாநில பொதுச் செயலாளர் ஜான்மோசஸ் மாலை அணிவித்தார். இதில், நிர்வாகிகள் ஜெயபிரகாசம், வேலுச்சாமி, ரெங்கராஜ், கவிஞர் ரவி, பாக்கியலட்சுமி, சுந்தர்ராஜன் கலந்து கொண்டனர். இதே போல, பலர் மரியாதை செலுத்தினர்.மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெயராஜ், மறை மாவட்ட பொருளாளர் பீட்டர் ராய், திருவருட்பேரவை ஒருங்கிணைப்பாளர் அருள், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத் தலைவர்பால் பிரிட்டோ, சிறுபான்மை நலக் குழுத் தலைவர் அலாவுதீன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>