×

அரசு கொள்முதல் நிலையங்களில் அமைச்சர் பெயரில் அதிமுகவினர் கட்டாய வசூல் செய்வதை தடுக்ககோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், மார்ச் 6: அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர் பெயரில் அ.தி.மு.கவினர் கட்டாய வசூல் செய்வதை தடுக்கக் கோரி திருவாரூரில் நேற்று நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மத்திய அரசின் ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத்தொகை ஆகியவற்றின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்  இதில் திருவாரூர்,நாகை,தஞ்சை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த காலங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் நிலை அலுவலர்கள் கையூட்டுப் பெற்று வந்த நிலையில் அதனை தடுக்கும் வகையில் தற்போது விவசாயிகளுக்கான தொகையானது அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த தொழிலாளர்கள் தற்போது வரையில் மூட்டை ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 30 வரையில் கையூட்டு பெறுவதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் விவசாயி ஒருவரிடம்  ரூ 3 ஆயிரத்து 700 லஞ்சம் பெற்றதாக கொள்முதல் நிலைய ஊழியர்கள் 2 பேரை  லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கொள்முதல் நிலைய ஊழியர்களிடம்  அமைச்சர் பெயரைக்கூறி ஆளுங்கட்சியினர் கட்டாய வசூலில் ஈடுபடுவதால்  கொள்முதல் நிலைய ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக கூறியும் மற்றும் நுகர்பொருள் வாணிப கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்  என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழநாடு நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச தொழிற் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வள்ளுவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் நீலமேகம், மண்டல தலைவர் கருப்பையன், செயலாளர் குருநாதன்,  பொருளாளர் முருகேசன் மற்றும் ஐ.என்.டி.யு.சி மாநில துணைப் பொதுச் செயலாளர் பாண்டியன், மண்டல தலைவர் அம்பிகாபதி, பொருளாளர் சங்கரநாராயணன், சி.ஐ.டி.யு மாநில பொது செயலாளர் புவனேஷ்வரன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,unions ,government ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...