×

தமிழகத்தின் பழம்பெருமைபெற்ற நகரங்களில் முக்கியமானது கரூர்

படைப்புக்கடவுளான பிரம்மா இங்குதான் படைப்புத்தொழிலை தொடங்கியதால் ஊர் பெயர் வந்ததாக ஐதீகம். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று பின்னணி கொண்ட நகரம். சங்க காலத்தில் சேரர் தலைநகராகவும், வணிக நகரமாகவும் திகழ்ந்துள்ளது. மேற்கு கடற்கரையில் இருந்து கிழக்கு கடற்கரைக்கு செல்லும் பெருவழியாக திகழ்ந்து வரைபடத்தில் புகழூர் இடம் பெற்றிருக்கிறது. இப்பகுதியில் ரோமானிய காசுகள் அதிகம் கிடைத்துள்ளன. உலக அளவில் ஜவுளித்துறை வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் கரூரானது பெருவழி வரைபடத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இடம்பெற்றிருக்கிறது. பெங்களூரு அதற்கப்பால் உள்ள வடமாநிலங்களையும் சேலத்துடன் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களையும் இணைக்கின்ற தேசிய நெடுஞ்சாலை இன்றைக்கு அமைந்துள்ளது. திருச்சி, தஞ்சை என கிழக்கு, கோவை, திருப்பூர் போன்ற மேற்கு மாவட்டங்களை இணைக்கின்ற சந்திப்பாக விளங்குகிறது. காவிரியாற்றுடன் அமராவதி கலக்கும் இடமான திருமுக்கூடலூரில் அகஸ்தீசுவரர் கோயில் நூற்றாண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்தது.


கரூரில் சூப்பர் இடங்கள் கல்யாண பசுபதீசுவரர் கோயில்
கரூரை கோயில் நகரம் என்றழைக்கப்படுகின்ற அளவுக்கு பிரசித்திபெற்ற கோயில்கள் உள்ளன. அவற்றில் முதன்மையாகவும், நகராட்சி உள்ளிட்ட பல நிறுவனங்களின் லட்சினையாகவும்(எம்ப்ளம்) பசுபதீசுவரர் கோயில் கோபுரம் உள்ளது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கரூர் கல்யாணபசுபதீசுவரர் சிவாலயம் தேவாரம் பாடல்பெற்ற கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்று. காமதேனு வழிபட்ட இத்தலம் ஆநிலையப்பர் ஆலயம் என சிவனடியார்களால் போற்றப்படுகிறது. திருஞானசம்பந்தர், கருவூரார், அருணகிரிநாதர் போன்றோரால் பாடல்பெற்ற தலம். புகழ்சோழ நாயனார் அரசாண்ட பகுதி. எறிபத்த நாயனார் தொண்டுசெய்த ஆலயம். சுயம்புலிங்கத்தின்மீது மாசி மாதம் ஐந்துநாட்கள் மூலவரின் மீது சூரியஒளிபடுகிறது. இடதுபக்கம் அலங்காரவல்லி, சவுந்தரநாயகி சன்னதிகள் உள்ளன. மூலவருக்கு நேராக உள்ள நந்திக்கு அருகே உள்ள தூண்களில் புகழ்ச்சோழர் சிவபக்தரின் சிலை, முசுகுந்த சக்கரவர்த்தியின் சிலைகள் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் கருவூரார் சன்னதி. ராகு கேது சன்னதிகள் உள்ளன. புகழ்ச்சோழர் மண்டபம், நூற்றுக்கால் மண்டபங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டின் பழம்பெரும் சிவத்தலங்களில் ஒன்றாகவும், கொங்குநாட்டின் ஏழு சிவத்தலங்களில் ஒன்றாகவும் கட்டடக்கலைக்கு தொன்மை வாய்ந்து திகழ்கிறது.

சமணர் படுக்கை
வஞ்சி மாநகரம் என  கரூர்அழைக்கப்பட்டதற்கு வஞ்சிமரங்கள் நிறைந்து காணப்பட்டதும் ஒரு காரணம். சங்க காலத்தில் திறன்மிகு ஆட்சி நடத்திய சேரன் இரும்பொறையின் மகன் கடுங்கோன் பட்டத்து இளவரசராக முடிசூட்டிய சமயத்தில் அவனை வாழ்த்துவதற்காக வடக்கே இருந்து சமணர்கள் வருகை தந்தனர். அவர்கள் தங்கியது கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலை. இங்குள்ள குகையில் கற் படுக்கை அமைத்து தங்கியுள்ளனர். 24வது தீர்த்தங்கரா மகாவீரர் தலைமையின் கீழ் இருந்த ஜைனத்துறவிகள் நாடெங்கிலும் சமண சமயத்தை பரப்பி வந்தனர். ஆடை ஆசையை துறந்து குகைப்பகுதியில் வசிப்பவர்கள். இவர்கள் புகழிமலை குகையில் தங்கியிருந்துள்ளனர். கற்படுக்கைகளை ஆற்றூரை சேர்ந்த பெருவணிகர் செங்காயப்பன் என்பவர் கற்படுக்கைகளை அமைத்துக்கொடுத்ததாக கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆய்வாளர்கள் மட்டுமே வந்து செல்லும் சமணர் படுக்கை அமைந்த குகையை சுற்றுத்தலாமாக்க வேண்டும் என்றகோரிக்கையும் உண்டு.

சதாசிவ பிரம்மேந்திரர் அதிர்ஷ்டானம்
சதாசிவ பிரம்மேந்திரர் 18ம் நூற்றாண்டில் கும்பகோணத்தில் வாழ்ந்த அத்வைத வேதாந்தியும், கர்நாடக இசை அறிஞரும் ஆவார். இங்கு இவரது ஜீவசமாதி உள்ளது. காசிவிசுவநாதர் கோயில் வளாகத்தில் வில்வமரமும், சுயம்புலிங்கமும் அமைந்துள்ளது. சதாசிவ பிரம்மேந்திரர் சமாதியில் மரத்தினை உயிர்ப்பித்த கல்வெட்டு இடம்பெற்றுள்ளது. நாடுமுழுவதும் இருந்து வந்து பக்தர்கள் ஆராதனைகளிலும் வழிபாடுகளிலும் பங்கேற்கின்றனர். உயர் பதவியில் இருப்பவர்கள், முன்னாள் முதல்வர், கவர்னர்கள் என முக்கிய பிரமுகர்கள் வழிபடும் தலம். கரூர் அருகே உள்ள நெரூரில் காவிரிக்கரையில் அமைந்துள்ளது. இங்கு அக்னீசுவரர் என்ற பெயரில் பழமைவாய்ந்த சிவன் கோயில் உள்ளது. நெரூர் அக்னீசுவரர் கோயிலுக்கு அருணகிரிநாதரே வந்து பதிகம் பாடியதாக வரலாறு.

கரூர் சேரர் அகழ் வைப்பகம்
கரூர் ஜவகர் கடைவீதியில் மாரியம்மன்கோயில் அருகே தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின்  கருவூர் சேரர் அகழ் வைப்பகம் உள்ளது. தொல்லியல் அருங்காட்சியகம் 1982ல் தொடங்கப்பட்டது. இங்கு வீர நடுகற்கள், ரோமானியர், சங்க கால சேர, சோழர், பாண்டியர்களின் காசுகள், பல்லவர் காசுகள், பிற்காலப் பாண்டியர்களின் காசுகள், ராஜராஜன், நாயக்கர் ஆட்சி காலத்து காசுகள், பனைஓலை சுவடிகள், மணிகள், செப்புத்தகடுகள், உருவாரங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கிமு 5ம் நூற்றாண்டு கால தமிழக முத்திரைக்காசுகள், மோதிரங்கள் குறிப்பிடத்தக்கவை.
கரூரின் தொன்மை, சிறப்பு, வரலாறு குறித்து 1973, 1977, 1979, 1996ம் ஆண்டுகளில் அகழாய்வுகளை தொல்லியல் துறை மேற்கொண்டு ஆய்வு முடிவுகள் தொன்மையான வரலாற்றினை சான்றுரைக்கின்றன. ஆராய்ச்சியாளர்கள், மாணவ மாணவியர் ஆய்வுக்காக வந்து செல்கின்றனர். உள்நாட்டினர் பெரியவர் ரூ.5, சிறியவர் ரூ.3, வெளிநாட்டினர் பெரியவர் ரூ.50, சிறியவர் ரூ.25 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


மாயனூர் சுற்றுலாத்தலம்

மாயனூர் கரூர்- திருச்சிதேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கரூரில் இருந்து 20 கிமீ. குளித்தலையில் இருந்து 21 கிமீ தொலைவு. 1.5 கிமீ அகலத்திற்கு காவிரியாறு அகண்ட காவிரியாக தமிழகத்தில் வேறு எங்கும் காணக்கிடைக்காத அகலத்தில் அமைந்துள்ளது. தடுப்பணை கதவணையாக 1.23 கிமீ தொலைவிற்கு போக்குவரத்து பாலத்துடன் கட்டப்பட்டிருக்கிறது.2007ல் தொடங்கி 2013ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. கரூர் மாவட்டம் மாயனூரையும் திருச்சி மாவட்டம் சீலைப்பிள்ளையார்புதூரையும் இணைக்கிறது. கடந்த ஆண்டு காவிரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது சுமார் 3 லட்சம் கனஅடி வரை நீரை கடந்து சென்று சாதனை படைத்தது. முதல்முறையாக. இங்கு அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா, மீன்அருங்காட்சியகத்துடன் உள்ளது. கரூர் மட்டுமின்றி அருகில் உள்ள திருச்சி, நாமக்கல் மாவட்ட மக்களுக்கும் சுற்றுலா தலமாக விளங்குகிறது.
 
கோடைகாலம் தவிர பசுமை நிறைந்த நீரோட்டம் உள்ள சுற்றுலாத்தலம். விடுமுறைநாட்களில் குடும்பத்துடன் வந்து காவிரியில் நீராடி, சிறுவர்கள் பூங்காவில் இளைப்பாறியும், மீன்களை பிடித்து அப்போதே சமைத்து சாப்பிட்டு செல்வது வழக்கம். ஆற்றில் தண்ணீர் வரும்போது மாயனூர் சுற்றுலாத்தலம் சொர்க்க பூமி தான்.

Tags : Karur ,cities ,Tamil Nadu ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்