×

முதுமலையில் கடந்த மாதம் ஏற்பட்ட காட்டு தீயில் சுமார் 95 ஹெக்டர் வனம் எரிந்து நாசம்

ஊட்டி, மார்ச் 6: முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் சுமார் 95 ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதிகள் எரிந்து சேதமடைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி முதுமலை புலிகள் காப்பக எல்லையோரத்தில் அமைந்துள்ள கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பக வனத்தில் ஏற்பட்ட பயங்கர காட்டு தீ முதுமலை புலிகள் காப்பக வனத்திற்குள்ளும் பரவியது. நேற்று தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநில எல்லையோர வனத்தில் தீ எரிந்தது. இதை முதுமலை உள் மண்டல துணை இயக்குநர் செண்பகபிரியா தலைமையிலான வனத்துறையினர் கவுன்டர் பயர் முறையில் தீயை அணைத்தனர். காட்டு தீயை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உள் மண்டல பகுதியில் லேண்டானா, பார்த்தீனியம் போன்ற களை செடிகள் மற்றும் புல்வெளிகள் என சுமார் 25 ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதி எரிந்து சேதமடைந்தது வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதேபோல் முதுமலை வெளி மண்டல பகுதிக்குட்பட்ட மசினகுடி, பொக்காபுரம், ஆச்சக்கரை, சிங்காரா, மாவனல்லா, மன்றாடியார், குரும்பர்பள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மர்மநபர்கள் வனத்திற்கு தீ வைத்ததில் சுமார் 70 ஹெக்டர் பரப்பளவிலான புல்வெளிகள் எாிந்து நாசமானது.

இதுகுறித்து உள்மண்டல துணை இயக்குநர் செண்பகபிரியா கூறுகையில், “பந்திப்பூரில் இருந்து முதுமலைக்குள்ளும் காட்டு தீ பரவியது. காட்டு தீ ஏற்பட்டவுடன் புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் இடம் பெயர்ந்து சென்று விட்டன. இதனால் வனவிலங்குகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. லேண்டானா போன்றவை தான் எரிந்துள்ளது. உள் மண்டலத்தில் 25 ெஹக்டர் பரப்பளவிலான வனங்கள் எரிந்துள்ளது. கவுன்டர் பயர் முறையில் தீ அணைக்கப்பட்டது. ஓம்பெட்டா, ேகம்ஹட் ஏரி மற்றும் மாயாற்றிலும் போதிய நீர் உள்ளது. ேமலும் குட்டைகள், தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு வருகிறது” என்றார். வெளிமண்டல துணை இயக்குநர் புஷ்பாகரன் கூறுகையில், “முதுமலை வெளிமண்டலத்தில் சுமார் 70 ஹெக்டர் பரப்பளவிலான புல்வெளிகள் எரிந்து நாசமானது. வேறு ஏதுவும் பாதிப்புகள் இல்லை. சீகூர், சிங்காரா, மசினகுடி ஆகிய வனச்சரகங்களில் வனப்பகுதிகளில் உள்ள இயற்கை குட்டைகள் மற்றும் தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு வருகிறது. இவற்றை வன விலங்குகள் அருந்துகிறதா, தொட்டிகளில் தண்ணீர் உள்ளதா என்பது குறித்து வன ஊழியர்கள் பார்வையிட்டு உடனுக்குடன் தண்ணீர் நிரப்படுகிறது” என்றார்.

Tags : forest fires ,forest fire ,Mudumalai ,
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...