×

தாசில்தார், பிடிஓக்கள் பணியிட மாற்றத்தை கண்டித்து வருவாய், ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், மார்ச் 6: நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களை கூண்டோடு வெளி மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்ததை கண்டித்து பெரம்பலூர் வருவாய்த்துறையினர், வளர்ச்சித்துறையினர் கூட்டாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தமிழக அளவில் 270 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 தாலுகா அலுவலகங்களில் பணிபுரிந்த பாரதிவளவன், ஷாஜஹான், கவிதா, சித்ரா ஆகிய 4 ரெகுலர் தாசில்தார்களும், அரியலூர் மாவட்டத்திற்கு கடந்த 27ம்தேதியே பணிமாற்றம் செய்யப்பட்டனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம், வளர்ச்சிப்பிரிவு அலுவலகங்களில் பணிபுரிந்து வந்த 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரியலூர் மாவட்டத்திற்கு கூண்டோடு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனைக் கண்டித்தும், மாவட்டம் விட்டு மாவட்டம் பணிமாறுதல் உத்தரவினை உடனே ரத்து செய்ய வலியுறுத்தியும், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பாக கூட்டாக கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூரில் நேற்று மாலை கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் தயாளன் தலைமை வகித்தார்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மரியதாஸ், செயலாளர் இளங்கோவன், செயற்குழு உறுப்பினர் சம்பத்குமார், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் குமரிஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, பிரேமாராணி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்சங்க மாவட்டத் தலைவர் பொன் ஆனந்தராசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினார். இதில் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட பொருளாளர் அறிவழகன் நன்றி கூறினார்.

Tags : Tasildar ,BOTOs ,Rural Development Department ,
× RELATED செந்துறை ஒன்றிய பகுதியில் ரூ. 11.15 கோடி...