×

பெரியமாரியம்மன் கோயில் தற்காலிக கடை ஏலம் ஒத்தி வைப்பு

ஈரோடு:  ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் கோயில் திருவிழா வரும் 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கி ஏப்ரல் மாதம் 7ம் தேதி  மறு பூஜையுடன் நிறைவு பெற உள்ளது. திருவிழாவையொட்டி கோயில் பகுதியில் 40 தற்காலிக கடைகள் அமைக்கப்படுகிறது. இந்த கடைகளுக்கு அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஏலம் விடப்படும். இதேபோல் இந்த ஆண்டும், தற்காலிக கடைகள் மற்றும் திருவிழா பந்தலில் விளம்பர தட்டிகள், பேனர், ஒலி பெருக்கி, வீடியோ மூலம் ஒளிபரப்பும் உரிமத்திற்கு நேற்று ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் ஏலம் நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் சபர்மதி தலைமை வகித்தார். இந்த ஏலத்தில் கலந்து  கொள்ள கடை எண் 2 முதல் 40 வரை  உள்ள கடைகளுக்கு உரிமம் பெறவும், விளம்பர தட்டி, பேனர், ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யும் உரிமத்திற்கு 2 லட்சம் ரூபாய் டெபாசிட்டும், முடிகாணிக்கை, முடி சேகரம் செய்து கொள்ள 25 ஆயிரம் ரூபாயும், மண் உருவ பொம்பை சேகரம் செய்து  கொள்ள 25 ஆயிரம் ரூபாயும், வாய்க்கால் மாரியம்மன் கோயிலை சுற்றி தற்காலிக கடைகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் உரிமத்திற்கு 10 ஆயிரம் ரூபாயும் டெபாசிட் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

டெபாசிட் செய்தவர்கள் ஏராளமானோர் ஏலத்தில் நேற்று கலந்து கொண்டனர். ஏலம் சரியாக நேற்று மதியம் 3 மணிக்கு துவங்கியது. ஆனால், ஏலத்தொகை அதிகமாக இருந்ததாலும், அதனை குறைக்க வலியுறுத்தியும் யாரும் ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால், கோயில் பந்தல் அமைக்கும் உரிமம் உள்ளிட்ட செலவினங்கள் மட்டும் ஏலம் விடப்பட்டு, 40 கடைகளின் ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் ஏலம் வரும் 13ம் தேதி நடைபெறும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு