×

பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் சீரழிந்து வரும் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

பூம்புகார், மார்ச் 6: பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் சீரழிந்து வரும் சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்கா பல ஆண்டாக பூட்டியே கிடக்கிறது. இதனை சீரமைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. பூம்புகார் சுற்றுலா தலமாக இருப்பதால் கடந்த திமுக ஆட்சியில் (2010) சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. பூம்புகாருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ரூ.13 லட்சத்தில் இந்த சிறப்பு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. சுற்றுலாத்துறையின் கீழ் செயல்பட்ட இந்த பூங்காவில் ஊஞ்சல், ராட்டினம், சறுக்கு மரங்கள் என குழந்தைகள் முதல் பெரியவர் வரை விளையாடும் சாதனங்கள் இருந்தது. பூங்கா கடற்கரையோரம் அமைந்து இருப்பதால் பூங்காவில் இருந்து கடல் அழகை ரசிக்கலாம். இதனால் பூம்புகாருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. பின்னர் இந்த பூங்கா சுற்றுலாத் துறையிடம் இருந்து தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தனியாரும் சரிவர பராமரிக்காததால் பூங்கா பல ஆண்டாக பூட்டியே கிடக்கிறது.

பூம்புகாருக்கு சுற்றுலா வரும் பயணிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்து திரும்புகின்றனர். சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது பூம்புகார் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் பள்ளி விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகளுடன் வந்து பொழுதை கழித்து சென்றனர். தற்பொழுது இந்த பூங்கா முட்புதர்கள் அடங்கிய காடாக காட்சியளிக்கிறது. பூங்காவின் பரிதாப நிலையை கண்டு வரும் அனைவரும் வேதனை அடையும் வகையில் உள்ளது. பூங்கா விரைவில் திறக்க ஏற்பாடு செய்தால் எங்களை போன்ற சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் வரும்போது மிகவும் சந்தோஷம் அடைவோம். இதுகுறித்து சமூக ஆர்வலர் குரு கூறுகையில், பூம்புகாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் கல்வி சுற்றுலா வரும் பள்ளி குழந்தைகளுக்கு சிறப்பு விளையாட்டு அரங்கமாக இருந்தது. வரும் பயணிகள் இளைப்பாறுவதற்கும் கொண்டு வந்த உணவை உண்ணுவதற்கும் அமைதியான சூழ்நிலையாக விளங்கி வந்தது.

பல ஆண்டுகளாக இந்த பூங்கா பூட்டியே கிடப்பதால் காடுமண்டி போய் வனமாக காட்சியளிக்கிறது. இந்த சிறுவர் பூங்காவை சரி செய்து விரைவில் திறக்க ஏற்பாடு செய்தால் கோடைவிடுமுறை நெருங்குவதால் பயணிகள் வருகை அதிகளவில் வந்து செல்வர். பூம்புகார் பேரில் உள்ள புகழுக்கும் நிலவும் இந்த மாதிரி சூழ்நிலையும் மிகவும் வேதனை உடையதாக இருக்கிறது என்று ஆதங்கத்துடன் கூறினார். இதுகுறித்து சுற்றுலா பயணி துரை கூறுகையில், பூம்புகாருக்கு ஆர்வமுடன் வரும் எங்களுக்கு வந்து பார்த்ததும் வேதனை அடைகிறோம். சுற்றுலா தலமான பூம்புகார் நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. குழந்தைகள் ஒரு நாள் பொழுதை ஆர்வமுடன் கழிப்பதற்கு விளையாட்டு அம்சங்கள் நிறைந்திருந்த இந்த சிறுவர் பூங்கா காடு மண்டி கிடக்கிறது. எங்களை போன்றவர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம். அடுத்த முறை வரும் போதாவது இந்த சிறுவர் பூங்கா சீர் செய்து திறக்கப்பட வேண்டும் என்று வேதனையுடன் கூறினார். பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். மேலும் காடாக காட்சியளிக்கும் இந்த பூங்காவால் சமூக விரோத செயல்கள் நடக்க அதிகளவில் வாய்ப்பு உள்ளது. சீரழிந்து இருக்கும் சிறுவர் பூங்கா சிறப்புடையதாக விரைவில் பொலிவு பெறுமா? பூங்காவை பார்வையிடும் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags : children ,Poompuhar ,tourist premises ,
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்