×

எண்ணூர் துறைமுகத்தில் இருந்து சரக்கு ரயிலில் தார்ப்பாய் மூடாமல் நிலக்கரி எடுத்து செல்வதால் ஆபத்து

திருவள்ளூர், மார்ச் 6: சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து சரக்கு ரயிலில் திறந்த நிலையில் நிலக்கரி கொண்டு செல்லப்படுவதால், ரயில் பாதையோரம் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தார்ப்பாய்போட்டு எடுத்து செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மேட்டூர், வடசென்னை போன்ற அனல்  மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தக்கூடிய  நிலக்கரி,  ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற  நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர், அங்கிருந்து  சரக்கு ரயில்களில்   (வேகன்)  ஏற்றப்பட்டு மேற்கண்ட அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மூடப்பட்ட ரயில்  பெட்டிகளில் இந்த நிலக்கரி எடுத்து செல்லப்படுவது வழக்கம். சில நேரங்களில் திறந்த பெட்டிகளிலும் நிலக்கரி எடுத்து  செல்லப்படுகிறது. இவ்வாறு திறந்த பெட்டியில்  நிலக்கரி கொண்டு செல்லும்போது, காற்றில் நிலக்கரி துகள்கள் மேலெழும்பி மாசுபடுவதை தடுக்க தார்ப்பாய் போட்டு மூடி எடுத்து செல்வது வழக்கம். ஆனால், சமீப காலமாக திறந்தநிலை சரக்கு ரயில் பெட்டியில் நிலக்கரி  தார்ப்பாய் போட்டு மூடாமல் எடுத்து செல்லப்படுகிறது.

இதனால், நிலக்கரி துகள்கள் காற்றில் பறந்து, ரயில் இருப்பு பாதையையொட்டி உள்ள  குடியிருப்புகளில் கரிப்படலம் படிகிறது. மேலும், தூசி மண்டலத்தால் குழந்தைகள், முதியவர்களுக்கு இருமல், மூச்சு திணறல், ஆஸ்துமா போன்ற  பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி திறந்த சரக்கு ரயில் பெட்டியில் ஏற்றப்பட்டு, திருவள்ளூர் மார்க்கமாக சென்றது. அப்போது, நிலக்கரியை தார்ப்பாய் போட்டு மூடாமல் கொண்டு சென்றதால் நிலக்கரி  தூசிகள் காற்றில் பரவி பொது மக்கள் மற்றும் ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.எனவே, இனிவரும் காலங்களில் சரக்கு ரயிலில் நிலக்கரியை எடுத்து செல்லும்போது  பொதுமக்களுக்கும், சுற்று சூழலை பாதிக்காத வகையிலும் தார்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என ரயில்வே துறை உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ennore ,
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்