×

கரூர் நகராட்சி தாந்தோணிமலை பூங்கா நகரில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதி

* மின் கம்பம் இருந்தும் எரியாத விளக்கு
* குண்டும் குழியுமான சாலைகள்

கரூர், மார்ச் 6: கரூர் நகராட்சிக்குட்பட்ட பூங்கா நகரில் கடந்த சில மாதங்களாக தெருவிளக்குக்கான மின்கம்பம் இருந்தும் தெரு விளக்கு எரியாததால் இந்த பகுதியினர் கடும் அவதியில் உள்ளனர். கரூர் நகராட்சியில் தாந்தோணிமலையின் மையப்பகுதியில் பூங்கா நகர் உள்ளது. இந்த நகரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும், பல்வேறு தெருக்களும் உள்ளன. இதில் பூங்கா நகரின் 3வது தெரு மற்றும் இதனை சுற்றிலும் உள்ள சில தெருக்களில் கடந்த ஒரு மாதமாக தெரு விளக்கு எரியாத காரணத்தினால் பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதி முழுவதும் சாக்கடை வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் வீடுகளின் அருகே பள்ளம் தோண்டி கழிவுகளை தேக்கி வைக்கும் அவல நிலையும் உள்ளதால் அனைத்து தரப்பினரும் கடும் விரக்தியில் உள்ளனர்.

மேலும் தாந்தோணிமலையின் பிரதான சாலையில் இருந்து பூங்கா நகர் மற்றும் இதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளுக்கு வரும் சாலையும் குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையின் மோசமான தன்மை காரணமாக நடந்து செல்லவே முடியாத நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. தெருவிளக்கு வசதி, சாக்கடை வடிகால் வசதி, சாலை வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் குறைவான நிலையிலேயே இந்த நகர் பகுதி உள்ளது. எனவே அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தர வேண்டும் என பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து இந்த பகுதியினர் தெரிவித்துள்ளதாவது: பாலகிருஷ்ணன்: கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பூங்கா நகரின் 3வது தெருவில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

ஆனால் எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது. நாளுக்கு நாள் குடியிருப்புகள் உருவாகி வரும் நிலையில் நகரின் தேவையை அறிந்து செய்து தர வேண்டிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளது. கடந்த பல மாதங்களாக இந்த பகுதிக்கென தெரு விளக்கு வசதி கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மின்கம்பம் இருந்தும் தெரு விளக்கு எரியாமல் உள்ளது. எனவே பகுதியை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து தர வேண்டும். ஜெயராமன்: இந்த 3வது தெரு மட்டுமின்றி, அருகில் உள்ள தெருக்களிலும் மின்சார விளக்குகள் இருந்தும் எரியாமல் உள்ளது. பகுதியில் நிலவி வரும் இப்பிரச்னை குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் நடந்த செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு வந்து பார்வையிட்டு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பிரச்னை குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான பலனும் இல்லை. எனவே இனியாவது தாமதம் செய்யாமல் தேவையான பணிகளை செய்து தர வேண்டும். ராஜாமணி: இந்த நகர்ப்பகுதி உருவாகி 20க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகிறது. பகுதி முழுதும் போதிய சாக்கடை வசதி சுத்தமாக இல்லை. இதனால் கழிவுகள் அனைத்தும் பள்ளத்தில் தேக்கி வைக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் இரவு நேரத்தில் இந்த பகுதி இருட்டாகவே உள்ளதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகளவு உள்ளது. இதனால் இரவு நேரங்களில் நடமாடவே பயமாக உள்ளது. இந்த பிரச்னை குறித்து முறையாக தெரிவிக்க உள்ளாட்சி அமைப்புகளும் இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது. எனவே பூங்கா நகர்ப்பகுதியில் சாக்கடை வடிகால் வசதி, தெரு விளக்கு வசதி உட்பட அனைத்து வசதிகளையும் செய்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

ராஜலிங்கம்: அருகில் உள்ள பல்வேறு தெருச்சாலைகள் புதிதாக உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தாந்தோணிமலையில் இருந்து பூங்கா நகர் வரும் பிரதான தெருச்சாலை நுழைவு வாயில் பகுதியில் மிகவும் மோசமாக உள்ளது. நடந்து செல்லக் கூட லாயக்கற்ற நிலையில் உள்ள இந்த சாலையை புதிதாக சீரமைத்து தர வேண்டும் என பகுதி மக்கள் அனைவரும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த நகர் முழுதும் நிலவி வரும் சாலை வசதி, தெரு விளக்கு வசதி போன்ற அனைத்து விதமான அடிப்படை தேவைகளையும் அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக செய்து தருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

Tags : Karur Municipal Tandonimalai Park ,facilities ,population ,
× RELATED பெரும் தொழிலதிபர்களுக்கு கடன்...