×

2 மணி நேர பார்க்கிங் கட்டண வசூலுக்கு எதிர்ப்பு அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய முடிவு

நாகர்கோவில், மார்ச் 6: நாகர்கோவில் நகராட்சியில் குறுகிய சாலைகள், ஆக்ரமிப்புகள் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. நாகர்கோவில் நகராட்சி இடத்தில் இருந்த பெட்ரோல் பங்க், வாடகை கார் நிலையம் ஆகியவை சாலை விரிவாக்கத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டன. காலியான இந்த இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதில் கேப் சாலையில் வேப்பமூடு சந்திப்பு முதல் ஜீவா மணி மண்டபம் வரை, கடை உரிமையாளர்கள் தங்களது கார்களை நிறுத்தி வந்தனர். இதனை பார்த்து, பொதுமக்களும் கார்கள், ஆட்டோக்கள், பைக்குகள் நிறுத்த தொடங்கினர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சாலை விரிவாக்கம் செய்ய மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மேலும் பூங்காவில் வாகனங்கள் நிறுத்தவும் கடும் எதிர்ப்பு இருந்ததால், பூங்காவில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கவும், அதற்கு மாற்று இடமாக கேப் சாலையை விரிவாக்கம் செய்யும் வரை வேப்பமூடு முதல் ஜீவா மணி மண்டபம் வரை பார்க்கிங் செய்ய காருக்கு ரூ40ம்,

பைக்கிற்கு ரூ10ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, அலெக்சாந்திரா அச்சக சாலையில் பைக்குகள் நிறுத்தப்படுவதை கட்டுப்படுத்த கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான குத்தகை உரிம ஏலம் ரூ20 லட்சத்திற்கு சென்றது. அதேவேளை ஒரு நாள் கட்டணம் என்பதற்கு பதிலாக இரண்டு மணி நேரத்திற்கு காருக்கு ரூ40ம், பைக்கிற்கு ரூ10ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக நீதிமன்ற சாலை, போக்குவரத்து கழக மருத்துவமனை இருந்த பகுதியிலும் கட்டணம் வசூலிக்க தொடங்கினர். இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, வேப்பமூடு முதல் ஜீவா மணிமண்டபம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். மேலும் அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், எங்கெங்கு கட்டணம் வசூலிப்பது என்பது முறைப்படுத்தப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : team ,parking fee collection team ,
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...