×

வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தொடர் போராட்டம் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் முடக்கம்: வெளிமாவட்ட இடமாறுதலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

நாகர்கோவில், மார்ச் 6: வெளிமாவட்ட இடமாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய் துறை ஊழியர்கள், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஊரக வளர்ச்சி துறையிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர்கள் உள்ளிட்டோர் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் இருந்து 4 தாசில்தார்கள் திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து வருவாய் துறை ஊழியர்கள் தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம் நேற்று 5ம் நாளாக தொடர்ந்தது. அலுவலகத்தைவிட்டு வெளியேறி அவர்கள் அலுவலகம் செல்லும் பாதைகளில் அமர்ந்திருந்தனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

 கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோலப்பன்,  செயலாளர் சுப்பிரமணியன், மாநில செயலாளர் மூர்த்தி, மாவட்ட துணை தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் வட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இதனை போன்று மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகா அலுவலகங்களிலும் வருவாய் துறை ஊழியர்களின் போராட்டம் நடைபெற்றது. இடமாறுதல் உத்தரவு திரும்பப்பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்றும், இது தொடர்பாக மாநில மைய முடிவின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவித்தனர். வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம் காரணமாக துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனை போன்று வட்டார வளர்ச்சி அலுவலர்களின் இடமாற்றத்தை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் போன்றவற்றில் உள்ள வளர்ச்சி பிரிவுகளில் உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களாகவோ, உதவி தேர்தல் அலுவலர்களாகவோ நியமிக்கப்படுவது இல்லை. மேலும் நேரடி தேர்தல் பொறுப்பிலோ, முடிவெடுக்கும் பொறுப்பிலோ அவர்கள் அமர்த்தப்படுவது இல்லை.
எனவே வட்டார வளர்ச்சி அலுவலர்களை தேர்தலுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று மாலையில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags : Revenue Department ,
× RELATED புதுச்சேரி அடுத்த சேதராபட்டு...