×

தாசில்தார், துணை தாசில்தார் இடம் மாற்றுவதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், மார்ச் 1: தாசில்தார்கள்  மற்றும் துணை தாசில்தார்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாற்றுவதை  கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள்  உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தொடர்ந்து நீண்ட  நாட்களாக ஒரே இடத்தில் பணியாற்றி  வரும் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய  வேண்டும் என தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதையடுத்து  கடந்த மாதம் 16ந்தேதி முதல்  ஒரு சில கலெக்டர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள்  முதல் கீழ்மட்ட அலுவலர்கள் வரையில் தொடர்ந்து பணியிட மாறுதல் செய்யப்பட்டு  வருகின்றனர். அரசு  அலுவலர்கள் தங்களுக்கு எதிரான பணியில் ஈடுபடுவார்கள் என்பதை கருத்தில்  கொண்டு தாசில்தார்கள் மற்றும் துணை தாசில்தார்களை மாவட்டம் விட்டு மாவட்டம்  மாற்றும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று மாநிலம் முழுவதும் உள்ளிருப்பு போராட்டம்  மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

 அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில்  உள்ள 8 தாலுகா அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் டிஆர்ஓ  அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்களில் அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்  மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி கலெக்டர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின்  மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். செயலாளர் அசோக் முன்னிலை  வகித்தார். இதில் மாநில துணைத் தலைவர் சோமசுந்தரம் மற்றும் அரசு ஊழியர்  சங்கத்தின் மாநில செயலாளர் சவுந்தரராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து சோமசுந்தரம் கூறுகையில், தேர்தலின்போது வாக்குச்சாவடி பணிகளில்  ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச்  செல்வதற்கான வாகனங்களுக்கு உரிய வாடகை, அலுவலர்கள் பயன்படுத்தும்  வாகனங்களுக்குரிய டீசல், அலுவலர்களுக்கான பயிற்சி செலவு மற்றும் உணவு செலவு  என தேர்தல் முடியும் வரையில் மொத்தம் ஒரு தொகுதிக்குட்பட்ட தாசில்தார் ஒருவர் ரூ.15 லட்சம் வரையில் கையிலிருந்து செலவு செய்துவிட்டு அதன் பின்னர் 3 மாதங்கள் கழித்து தேர்தல் ஆணையத்திடம் பெறும் நிலை இருந்து  வருகிறது.

இந்நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் இந்த அலுவலர்களை  மாற்றும்போது இதுபோன்று செலவு தொகைக்கு என்ன செய்வது எனவே அலுவலர்களை  மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றும் பணியினை அரசு உடனடியாக கைவிட  வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். வலங்கைமான்: வலங்கைமானில் வருவாய்துறை அலுவலர்  சங்கத்தினர் தாசில்தார்களை மாவட்டம் விட்டு மாவட்டம்  பணி மாறுதல்  செய்யும் அரசின் நடவடிக்கையை கண்டித்து தாலுகா அலுவலகம் முன்பு  ஆப்பாட்டம் நடத்தினர். வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வட்டத்தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ரவி பேசினார். தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன், மத்திய செயற்குழு உறுப்பினர் குமார்,  அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் புஷ்பநாதன், வட்டத்தலைவர் மனோகரன்,  பொருளாளர் ராஜசேகரன், இணை செயலாளர் தனபாலன் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். வட்ட செயலாளர் விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.

Tags : Revenue Officer ,transfer ,Association ,Deputy Tahsildar ,
× RELATED நந்தியம்பாக்கம் ஊராட்சியில் தண்ணீர்...