×

அல்லாடவைக்கும் அகலரயில்பாதை வேலை குளமாகிக் கிடக்கும் பாலத்தால் நிலங்களுக்கு செல்ல முடியவில்லை விவசாயிகள் புகார்

ஆண்டிபட்டி, மார்ச் 1: தமிழகத்தில் ரயில் போக்குவரத்து இல்லாத மாவட்டமாக தற்போது தேனி இருந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவர்களின் வியாபாரத் தேவைக்காக 1928ம் ஆண்டு மதுரையிலிருந்து போடி வரை மீட்டர் கேஜ் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இது தேனி மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி வட்டார மக்களுக்கு உதவியாக இருந்தது.  மேலும் குறைந்த கட்டணத்தில் பழங்கள், காய்கறிகள், மற்றும் இதர விவசாயப் பொருள்களை மதுரை புறநகர் மாவட்ட மக்கள் கொண்டு செல்லவும், அங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லவும் இந்த ரயில்சேவை வசதியாக இருந்தது.  மேலும் சென்னை மற்றும் வடமாநில ரயில்களைப் பிடிக்கவும், அதுபோல் கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்வோருக்கும் இந்த ரயில் சேவை மிகவும் உதவிகரமாக இருந்தது. இந்நிலையில் இந்தியா முழுவதும் அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளையும், அகல ரயில் பாதையாக மாற்றியதால், கடைசியாக 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை - போடி இடையே ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மதுரையிலிருந்து போடி வரை செல்லும் ரயில் பாதையை அகலப்படுத்தவும், பாலங்கள், தடுப்பு சுவர்கள் மற்றும் தண்டவாளங்கள் உள்ளிட்ட  இப்பணிக்காக ரூ. 280 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக, இப்பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் திட்டத்திற்கான தொகையினை புதுப்பித்து, புதுப்பித்து கடந்த 4 ஆண்டுகளில் ஆமை வேகத்தில் பாலங்கள், தடுப்புச் சுவர்கள் உள்ளிட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே குன்னூர் டோல்கேட்டின் தெற்கு பகுதியில் விவசாய நிலங்களுக்குச் செல்லும் தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே  ரயில் செல்லும் பாதையுள்ளதால், ரயில்வே துறையினர் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இப்பகுதியில் பெய்த சாரல் மழைக்கு பாலத்தின் அடியில் தண்ணீர் பல மாதங்களாக காணப்படுகிறது. இதனை ரயில்வே துறையினர் கண்டு கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவதால், இப்பகுதியில் உள்ள விவசாயிகள், விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி பாண்டி கூறுகையில்,`` ரயில்வே துறை கட்டும் பாலத்தினால் மழை காலங்களில் விவசாயிகள் மற்றுமின்றி யாரும் அவ்வழியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் காலப்போக்கில் மண் வந்து பாலத்தை மேவி விடும். இந்த பாலத்திற்காக செலவு செய்யும் பணத்தை வைத்து 2 மீட்டர் உயரத்திற்கு ரயில்வே சாலை உயர்த்தி பாலம் கட்டியிருந்தால், ரயில் பாலமே தேவையிருக்காது. எப்போதாவது வரும் ரயிலுக்காக லட்சக் கணக்கில் செலவு செய்து பாலம் கட்டி தரும் மத்திய - மாநில அரசுகள், விவசாயிகள் நாள்தோறும் விவசாய நிலங்களுக்கு எப்படி போய் வருவார்கள் என்று நினைக்கவில்லை. மழை காலத்தில, பாலத்தின் அடியில் தண்ணீர் நிறைந்து கொண்டால் வெளியேறுவதற்கு இடமே இல்லை என்றார்.


Tags : lake ,lands ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு