×

கரூர் மினி பேருந்து நிலையம் பின்புறம் கடைகள் ஆக்கிரமிப்பு, ஹாரன் சத்தத்தால் பயணிகள் அவதி

கரூர், மார்ச் 1: கரூர் மினிபேருந்து நிலையத்தின் பின்புறம் கடைகள் ஆக்கிரமிப்பு, ஹாரன் சத்தத்தினால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கரூர் பேருந்து நிலையத்தின் அருகிலேயே மினி பேருந்து நிலையம் உள்ளது. மினிபேருந்துக்கென தனியாக கரூரில் மட்டுமே நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் பேருந்து நிலையத்திற்கு உள்ளேயே ஒரு பகுதியில் மினி பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. எனினும் மினி பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் பயணிகள் செல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன.

கடைகளையும், தள்ளுவண்டிகளையும் போட்டு பயணிகள் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் வேறு வழியாக சுற்றிக்கொண்டு போகின்றனர். மேலும் மினி பேருந்துகளின் ஹாரன் சத்தம் காதை பிளக்கும் வகையில் உள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பேருந்து நிலையத்தில் நாளுக்குநாள் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி கொண்டே போகிறது. தற்போது மினிபேருந்து நிலையத்தின் பின்புறத்தில் அதிக அளவில் கடைகள் போடப்பட்டுள்ளன. கடைகளை முறைப்படுத்த நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கடைகளுக்கு அடையாள அட்டை கொடுத்து பயணிகள் நடமாடும் இடம் அல்லாத பகுதியில் தான் தள்ளுவண்டியோ தரைக்கடையோ அமைக்க வேண்டும்.

ஆனால் இஷ்டத்திற்கு கடைகளை போட்டு வைத்துள்ளனர். இதனால் நகராட்சிக்கு வருமானமும் இல்லை. எத்தனை கடைகள் உள்ளன ஒரு கடைக்கு எவ்வளவு வாடகை வசூல் செய்கின்றனர். இது நகராட்சி நிர்வாகத்திற்கு போகிறதா என்பது பற்றி எதுவும் தெரியாத நிலை தான் உள்ளது. உள்ளாட்சித்தேர்தல் நடத்தியிருந்தால் கவுன்சிலர்கள் கேள்வி கேட்பார்கள். தேர்தலையும் நடத்தாமல் இருக்கின்றனர். தனி அதிகாரிகள் தான் நிர்வாகத்தை நடத்துகின்றனர். இவர்களுக்கும் மக்கள் தொடர்பு கிடையாது. எந்த தகவலையும் அறிவிப்பதில்லை. வரியை கட்ட வேண்டும் என அறிவிப்பு மட்டும் செய்கின்றனர். அதைத்தவிர எந்த வேலையும் உருப்படியாக செய்வதில்லை. கேட்க ஆள் இல்லாத நிர்வாகமாக கரூர் நகராட்சி நிர்வாகம் மாறி விட்டது. கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகள் தலையிட்டு இதுபோன்ற பிரச்னைகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மினிபேருந்து நிலையத்தில் முன்னால் நிற்கும் வாகனத்தை கிளப்புவதற்காக ஹாரன்களை அடித்தபடியே இருக்கின்றனர். இதனால் எந்நேரமும் ஒலி காதை பிளக்கின்ற வகையில் உள்ளது. உள்ளே நிற்க கூட முடியவில்லை என்றனர்.

Tags : Karur ,bus station ,shops ,passengers ,Haran ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்