×

வையம்பட்டி அருகே என்.பூலாம்பட்டி வழியாக நிறுத்தப்பட்ட பேருந்தை இயக்ககோரி 3பஸ்களை சிறைபிடித்த பொதுமக்கள் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்

மணப்பாறை, பிப்.28: வையம்பட்டி அருகே நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் மீண்டும் பஸ்விடக்கோரி 3 அரசு பஸ்களை கிராமமக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ளது என்.பூலாம்பட்டி கிராமம். இந்த கிராமம் வழியாக மணப்பாறை - தரகம்பட்டி வழித்தடத்தில்  இயங்கி வந்த அரசு பேருந்து சில மாதங்களாக எந்த அறிவிப்புமின்றி  நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை  மக்கள் சந்திப்பு பயணத்தின்போது பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்ததாக  கூறப்படுகிறது. ஆனாலும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள்  பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே மணப்பாறை- தரகம்பட்டி வழித்தடத்தில் என்.பூலாம்பட்டி கிராமம் வழியாக மீண்டும் பஸ் விடக்கோரி தமிழ்நாடு விவசாயிகள்  சங்கத்தின் சார்பில் ஒன்றிய துணை செயலாளர் எம்.ராஜூ தலைமையில் என்.பூலாம்பட்டி கிராம பொதுமக்கள் நேற்று காலை அவ்வூர் வழியாக வந்த மூன்று அரசு நகர  பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிதம்பரம், ஒன்றிய செயலாளர் வீரமணி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, கிளை செயலாளர் சின்னத்துரை  ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த வையம்பட்டி போலீஸ்காரர்களிடம் போராட்டக்காரர்கள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள்  தான் வரவேண்டுமென கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். சுமார் ஒரு மணி  நேரத்திற்கு பிறகு வந்த மணப்பாறை போக்குவரத்து பணிமனை  மேலாளர், நிறுத்தப்பட்ட பேருந்து வழித்தடத்தில் மீண்டும் பஸ் இயக்குவதாக  உறுதியளித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் சிறைப்பிடித்த 3 பேருந்துகளும் விடுவிக்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு  சென்றது.

Tags : Vayampatti 3 ,V. Bambambati ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு