×

முசிறியில் ரூ.21 கோடியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

தா.பேட்டை, பிப்.28: முசிறி பேரூராட்சியில் ரூ.21 மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.முசிறி பேரூராட்சி பகுதியில் வசிக்கும்  மக்களுக்கு ரூ.21 கோடி மதிப்பில் முசிறி அருகே உள்ள காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். முசிறி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 40 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர். இதனால் தட்டுப்பாடற்ற குடிநீர் வழங்கவேண்டுமன பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் 2011 தேர்தல் பிரசாரத்திற்கு முசிறிக்கு வந்த ஜெயலலிதா முசிறி பேரூராட்சியில் குடிநீர் பிரசனையை போக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இந்நிலையில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் திட்ட பணிகளை துவக்கி வைத்தார். இதையடுத்து முசிறி அருகே செவந்தலிங்கபுரம் காவிரி ஆற்றில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் போர்வெல்லுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு குடிநீர் திட்டப் பணிகள் துவங்கியது. பணிகளில் அவ்வப்போது தொய்வு ஏற்பட்டது.

பொதுமக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் விரைந்து குடிநீர் திட்டப் பணிகளை முடிக்க வேண்டுமென தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் குடிநீர் திட்டப் பணிகள் முடிவடைந்ததையடுத்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி குடிநீர் திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இதையடுத்து குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து  முசிறி எம்எல்ஏ செல்வராஜ், குடிநீர் வடிகால்வாரிய அலுவலர்கள் ஜோதிமணி, எழிலரசன், உதவி பொறியாளர் கார்த்திக்கேயன், செயல் அலுவலர் தேவதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் குடிநீரை முசிறி நகர மக்களுக்கு வழங்குவதற்கான மின் மோட்டார்களை இயக்கி வைத்தார். ஜெயலலிதா கடைசியாக துவக்கி வைத்த பணி முசிறி நகர மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்கு தினகரன் நாளிதழ் தொடர்ந்து பல வருடங்களாக மக்களின் எதிர்பார்ப்பை  படத்துடன் செய்தி வெளியிட்டு வந்துள்ளது. மக்களின் கோரிக்கைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் தினகரன் வெளியிட்டு வந்த செய்தியின் பலனாகவும், புதிதாக காவிரி குடிநீர் திட்டம் செவந்தலிங்கபுரத்திலிருந்து துவங்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் தினகரன் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். ஜெயலலிதா இறுதியாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முசிறி குடிநீர் திட்டப் பணிகள் துவக்க விழாவும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chief Minister ,Mussoorie ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...