×

ஜெருசலேம் புனிதப்பயணம் அரசு சார்பில் நிதியுதவி

காஞ்சிபுரம், பிப்.28: காஞ்சிபுரம் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை.தமிழகத்தை சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் தலா ₹20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின்கீழ், பயன்பெற விரும்பும் கிறித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.2018-19ம் நிதியாண்டு முதல் புனித பயணம் மேற்கொள்ளும் அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய கிறித்தவர்களின் எண்ணிக்கையை 500ல் இருந்து 600 என உயர்த்தியும், இவற்றில் 50 கன்னியாஸ்திரி, 50 அருட்சகோதரி புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இந்த பயணம் பெத்லேகம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலியோ சமுத்திரம் மற்றும் கிறித்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. வெளிநாட்டு பிரச்னைகள் நிகழுமாயின்  பாதுகாப்பு கருதி சில இடங்கள் பயணிப்பது நிறுத்தப்படும்.

முதல்கட்டமாக மார்ச்  2019ல் தொடங்கி ஜூன்  2019 வரை பல்வேறு குழுக்களாக மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்,  குடும்பத்தினர், பாதுகாவலர் தமிழ்நாட்டில் வசிக்கும் கிறித்துவ மதத்தவராக இருத்தல் வேண்டும். இதற்கு ஆதாரமாக கல்வி நிறுவனம் வழங்கியுள்ள மாற்றுச்சான்றிதழ், திருமுழுக்கு சான்றிதழ், வட்டாட்சியர் சான்றிதழ் இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அரசு வழங்கும் நிதியுதவி ₹20 ஆயிரம் நீங்கலாக, மீதமுள்ள தொகை விண்ணப்பதாரரால் செலுத்த வேண்டும். இதற்கான உறுதிமொழியை கையொப்பமிட்டு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் விண்ணப்பதாரரையும் சேர்த்து அதிகபட்சம் 4 பேர் பயணம் செய்யலாம். இதில் 2 வயது நிறைவடைந்த 2 குழந்தைகளும் இருக்கலாம்.

70 வயது நிறைவடைந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவருக்கு துணையாக, அவர் விரும்பும் ஒருவரை மேற்படி நிபந்தனைகளுக்குட்படும் பட்சத்தில் அவருடன் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கல்சமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005. என்ற முகவரிக்கு மார்ச் 15ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

Tags : Jerusalem ,pilgrimage ,government ,
× RELATED ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும்...