×

செய்யூர் தாலுகாவில் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதில் சிக்கல்மாற்று பயிர்களால் வைக்கோலுக்கு பற்றாக்குறை

செய்யூர், பிப் 28: செய்யூர் தாலூகா பகுதிகளில் பாசனத்திற்கு போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் நெற்பயிரிடுவதை தவிர்த்து மாற்று பயிர்களுக்கு மாறியுள்ளனர். இதனால், கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் தீவனம் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செய்யூர் தாலூகாவில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. ஒரு காலத்தில் இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலும் நெற்பயிர்களை மட்டுமே பயிர் செய்தனர். மேலும் நெற்பயிர் அறுவடை காலங்களில் அதன் மூலம் கிடைக்கும் வைக்கோல்களை தங்களது கால்நடை தீவனத்திற்கு மட்டுமின்றி, வெளியூர்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து போனதாலும், பாசனத்துக்கு தண்ணீர் இல்லாததாலும், விவசாயம் பாதித்தது. இதையொட்டி, கால்நடைகளுக்கு வைக்கோல் தீவனம் முறையாக வழங்க முடியாமல் அதனை வளர்பவர்கள் அவதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து  கால்நடை வளர்போர் கூறுகையில், “முன்பெல்லாம் ஆண்டுதோறும் பருவமழையின்போது நெற்பயிர் விவசாயம் செய்ய போதுமான மழைநீர் கிடைத்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழையானது பொய்த்து போனதால், விவசாயிகள் நெற்பயிர்களை பயிரிட முடிவதில்லை. இதனால் குறைந்த தண்ணீரில் வளரும் மாற்று பயிர்களான பாகற்காய், தர்பூசணி, வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்கின்றனர். ஒரு சிலவிவசாயிகள் மட்டுமே நெற்பயிர் விவசாயம் செய்கின்றனர். அதுவும் குறுகிய ஏக்கரில் மட்டுமே பயிர் செய்கின்றனர்.

அவர்களது பயிர்கள் மூலம் கிடைக்கும் வைக்கோல், அவர்களது கால்நடைகளுக்கே போதுமானதாக இருப்பதால், மற்ற விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு வைக்கோல் தீவனம் கிடைக்கவில்லை.
அப்படியே கிடைத்தாலும் ஒரு ஏக்கர் வைக்கோலுக்கு ₹3000 முதல் ₹5000 வரை விற்பனை செய்கின்றனர்.முன்பு ஒரு ஏக்கருக்கு ₹1000 முதல் ₹1500 வரை விற்கப்பட்ட வைக்கோல், விலை உயர்வு காரணத்தால் நாங்கள் பெருத்த மனஉளைச்சல் அடைந்துள்ளோம். கால்நடைகளுக்கு முக்கிய தீவனமான வைக்கோல் கிடைக்காததால் கால்நடைகள் உடல் மெலிந்து வருகின்றன. இதற்கு அரசு தான் உரிய தீர்வு காண வேண்டும்” என்றனர்.

Tags : Cheyur taluka ,
× RELATED ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு...