×

புத்தகரம் ஊராட்சியில் கட்டி முடித்து 2 ஆண்டுகள் ஆன புதிய அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும்

வாலாஜாபாத், பிப்.28: புத்தகரம் ஊராட்சியில் குழந்தைகளுக்காக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் நடுநிலை, தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், கால்நடை மருந்தகம், விவசாய வங்கி என பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள குழந்தைகளுக்காக புதிய அங்கன்வாடி மையம் கட்டித் தரவேண்டும் என இப்பகுதி மக்கள்  கோரிக்கை வைத்தனர். இதைதொடர்ந்து, கடந்த 2016 - 17ம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அதே பகுதியில் விவசாய வங்கியின் பின்புறம் ₹7 லட்சத்தில் அழகிய ஓவியங்களும், சாய் தல பாதைகளும் அமைக்கப்பட்டு புதிய அங்கன்பாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடித்து 2 ஆண்டுகளாகியும், இதுவரை திறக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை இப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், மாவட்டம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘புத்தகரம் ஊராட்சியில் 3 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அதில் 2 அங்கன்வாடி மையங்கள் புதிய கட்டிடங்களில் செயல்படுகின்றன. இதைதொடர்ந்து, பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி செயல்பட்டதால், அதே பகுதியில் புதிய கட்டிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனாலும், கட்டப்பட்ட இந்த கட்டிடம் இதுவரை திறக்கப்படாததால், தற்போது குழந்தைகள் நடுநிலைப்பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் படிக்கின்றனர். இந்த நடுநிலைப்பள்ளியில் உள்ள வகுப்பறைகளுக்கு செல்ல வேண்டுமானால், சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை
உள்ளது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், இந்த கட்டிடம் ஏன் திறக்கப்படவில்லை என இதுவரை பதில் கிடைக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடத்தை திறக்க  வேண்டும்’’  என்றனர். இதுபற்றி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டதற்கு. ‘‘தற்போதுதான் புதிதாக மாறுதலாகி வந்துள்ளேன். இந்த அங்கன்வாடி மையம் குறித்து கலெக்டரிம் தெரிவித்து, உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.

Tags : center ,Buddha ,Anganwadi ,completion ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்