×

சட்ட விரோத பேனர் விவகாரம்: காஞ்சி கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும்

சென்னை, பிப். 28: சட்ட விரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து மார்ச் 13ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி காஞ்சிபுரம்  கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சாலைகள், நடைபாதைகளில் அரசியல் கட்சியினர், அமைப்பினர் பேனர் வைக்க தடைவிதித்து நீதிமன்றம்  உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவை மீறி சென்னை, கோவை உள்பட பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டன. பெரும்பாலும் இந்த பேனர்கள் சாலைகளின் குறுக்கேயும், நடைபாதையை ஆக்கிரமித்தும் வைக்கப்பட்டதாகவும், இதற்கு அரசு அதிகாரிகளே அனுமதி வழங்கியதாகவும், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக செயல்படுவதாக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர், சென்னை, கோவை மாநகராட்சி ஆணையர்கள் ஆகியோர் மீது அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், விதிமுறைகளை மீறி பேனர் வைக்கப்படுவது இன்னும் தொடர்கிறது. இந்த விஷயத்தில் நீதிமன்ற உத்தரவுகளை அரசு இன்னும் முழுமையாக செயல்படுத்தவில்லை. இந்த விவகாரத்தில் அரசு கடினமான நிலையில்தான் பாடம் கற்றுக்கொள்ளும் என தெரிகிறது என கருத்து தெரிவித்தனர். மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி, அனுமதியில்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேனர்கள் வைக்கபட்ட விவகாரத்தில், எடுத்த நடவடிக்கை குறித்து காஞ்சிபுரம் கலெக்டர், மாவட்ட எஸ்பி, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் ஆகியோர் மார்ச் 13ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்

Tags : banner affair ,
× RELATED பேனர் விவகாரத்தின் போது...