×

விளவங்கோடு தாலுகாவை பிரித்து உருவாக்கப்பட்டது கிள்ளியூர் தாலுகா நாளை செயல்பாட்டிற்கு வருகிறது: 27 வருவாய் கிராமங்கள் இடம்பெறுகிறது

நாகர்கோவில், பிப்.28:  விளவங்கோடு தாலுகாவை பிரித்து உருவாக்கப்பட்ட கிள்ளியூர் புதிய தாலுகா நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. இதில் 27 வருவாய் கிராமங்கள் இடம்பெற்றுள்ளன. நாகர்கோவிலில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கல்குளம் தாலுகாவை பிரித்து திருவட்டார் தாலுகாவும், விளவங்கோடு தாலுகாவை பிரித்து கிள்ளியூர் தாலுகாவும் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதற்கேற்ப திருவட்டார், கிள்ளியூர் தாலுகாக்கள் தொடங்கி வைக்கப்பட்டன. விளவங்கோடு தாலுகாவை பிரித்து கிள்ளியூரை தலைமையிடமாக கொண்டு மிடாலம் மற்றும் பைங்குளம் ஆகிய இரு குறு வட்டங்கள் மற்றும் 27 வருவாய் கிராமங்களுடன் புதிய கிள்ளியூர் தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. கிள்ளியூரில் உள்ள பழைய கால்நடை மருந்தக கட்டிடத்தில் தாலுகா செயல்பட இருக்கிறது.

கிள்ளியூர் புதிய தாலுகாவில் உருவாக்கப்பட உள்ள 91 பணியிடங்களில் 72 பணியிடங்களை மறு பரவலமர்த்தல் மூலமும், 15 பணியிடங்களை வருவாய்துறைக்கும், 4 பணியிடங்களை நில அளவைத்துறைக்கும் என்று 19 பணியிடங்களை புதியதாக உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வரும் விளவங்கோடு தாலுகாவிற்கு 4 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகிறது. கிள்ளியூர் புதிய தாலுகாவிற்கு ஒரு வருடத்திற்கு ஏற்படும் தொடரும் செலவினம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 63 ஆயிரத்து 970, தொடரா செலவினமாக ரூ.18 லட்சத்து 66 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுகிறது. குரூப் கிராமங்களை பிரித்து புதியதாக குரூப் கிராமங்களை உருவாக்குதல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள் சட்டம் மற்றும் அரசாணைகள் பின்பற்றப்பட வேண்டும். இரவு காவலர், மசால்ஜி மற்றும் புல உதவியாளர் போன்ற பணியிடங்கள் அவுட்சோர்சிங் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப வேண்டும். அலுவலக உதவியாளர் பணியிடங்களை விதிகளின்படி உரிய அரசாணைகளை பின்பற்றி நிரப்ப வேண்டும்.

மறுபரவலமர்த்தல் மூலம் விளவங்கோடு தாலுகாவில் இருந்து கிள்ளியூர் புதிய தாலுகாவிற்கு மாற்றப்பட வேண்டிய பணியிடங்கள் அப்பணியிடங்களுக்குரிய தளவாடங்களுடன் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணைப்படி புதிய தாலுகா பிப்ரவரி 18ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. விளவங்கோடு தாலுகாவில் இருந்து கிள்ளியூர் புதிய தாலுகா பிரிந்த பின்னர் கிள்ளியூர் தாலுகாவின் பரப்பளவு நிர்ணயிக்கப்பட்ட 250 ச.கி.மீக்கு குறைவாக 154.71 ச.கி.மீ பரப்பளவு மட்டுமே உள்ள நிலையிலும், பிரிவினைக்கு பின்னர் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள் விளவங்கோடு தாலுகாவிற்கு வரையறுக்கப்பட்ட அளவில் இல்லை என்றபோதும் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்கள் இம்மாவட்டத்திற்கு பொருந்தாது என்பதால் சிறப்பினமாக கருதி குமரி மாவட்ட கலெக்டரின் முன்மொழிவு ஏற்று கிள்ளியூர் தாலுகா உருவாக்க உயர்மட்ட குழு பரிந்துரை செய்திருந்தது.

விளவங்கோடு தாலுகா இதுவரை கடையால், நெட்டா போன்ற மலைப்பகுதி முதல் தேங்காப்பட்டணம், பூத்துறை என்ற கடல் பகுதி வரை சுமார் 50 கி.மீ நீளம் வரை இருந்து வந்தது. 15 கி.மீ தொலைவில் கிள்ளியூர், மேலக்குறும்பனை, மிடாலம், இனயம், தேங்காப்பட்டணம், இரயுமன்துறை, தூத்தூர், கொல்லங்கோடு ஆகிய கடற்கரை கிராமங்கள் இருந்தன. எனவே அதிக தொலைவினை கொண்ட இந்த பரப்பு முழுவதும் ஒரே தாசில்தாரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக உள்ளதால் கடல் சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் இழப்பை கண்காணிக்க தாசில்தாருக்கான பொறுப்பு மிக அதிகமாக உள்ளது என்றும், கிள்ளியூர் பகுதிக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் மக்கள் மீன்பிடி தொழிலையும் கிள்ளியூர், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரப்பர் விவசாயத்தையும் நம்பியுள்ளனர்.

இந்த மக்கள் 25 கி.மீ தொலைவில் உள்ள விளவங்கோடு தாலுகா அலுவலகம் செல்ல கால விரயத்தை தவிர்க்கும் வகையில், மீனவ மக்களின் குறைகளை விரைந்து தீர்க்கும் வகையில் விளவங்கோடு தாலுகாவை பிரித்து புதிய கிள்ளியூர் தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிள்ளியூர் தாலுகாவில் தாசில்தார் கோலப்பன் உட்பட அதிகாரிகள் நாளை (1ம் தேதி) முதல் பொறுப்பேற்று அலுவலகம் முறைப்படி செயல்பாட்டிற்கு வர உள்ளது. மேலும் திருவட்டார் தாலுகாவில் தாசில்தார் சுப்பிரமணியன் ஏற்கனவே பொறுப்பேற்றுள்ள நிலையில் இதர அலுவலர்கள் மார்ச் 1ம் தேதி முதல் பொறுப்பேற்று அலுவலகம் செயல்பட தொடங்கும் என்று கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Kiliyur ,revenue villages ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 636 வருவாய்...