×

பெரியகுளத்தில் மருத்துவர்கள் இல்லாமல் தவிக்கும் மாவட்ட தலைமை மருத்துவமனை

தேனி, பிப். 28: தேனி மாவட்ட அரசினர் தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் பிரிக்கப்படாத காலத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டமாக தேனி மாவட்டம் இருந்த காலத்தில் இருந்தே மாவட்ட தலைமை அரசினர் மருத்துவமனையாக பெரியகுளம் அரசினர் மருத்துவமனை இருந்து வந்தது. பெரியகுளம் நகர் சோத்துப்பாறை செல்லும் சாலையில் உள்ள இம்மருத்துவமனையில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன மருத்துவமனை கட்டிடங்கள் உள்ளன. நவீன மருத்துவ கருவிகள் உள்ளன. இம்மருத்துவமனையில் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புடைய இம்மருத்துவமனையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துவக்காதபோது, இம்மருத்துவமனையில் சுமார் 30 மருத்துவர்கள் பணியில் இருந்தனர். நாள்தோறும் சுமார் 3 ஆயிரம் புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

உள்நோயாளிகளாக சுமார் 200 பேர் வரை தங்கி சிகிச்சை பெற்றனர். ஆனால் இன்றைக்கு இம்மருத்துவமனையின் நிலை தலைகீழாகிவிட்டது. மாவட்ட தலைமை அரசினர் மருத்துவமனையானது ஆரம்ப சுகாதார நிலையம் போல மிகச்சுருங்கிய நிலையில் தள்ளப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் கண்மருத்துவமனை, குழந்தைகள் நலப்பிரிவு, பிரசவ வார்டு, இருதய சிறப்பு பிரிவு, பல்மருத்துவ பிரிவு, சிறப்பு அறுவை சிகிச்சை அரங்கம் என பல்வேறு சிறப்பு பிரிவுகளுக்கான பிரத்யேக கட்டடங்கள் உள்ளன. ஆனால் இச்சிறப்பு கட்டிடங்களுக்கான மருத்துவர்கள் தற்போது இல்லாத நிலையே
உள்ளது. இங்கு 37 மருத்துவர்கள் இருக்கவேண்டிய நிலையில், பணியில் சுமார் 10 மருத்துவர்களே பணியில் உள்ளனர். முக்கியமாக இருதயநோய், கண், காது,மூக்கு, தொண்டை பிரிவு, கண்மருத்துவம், பல்மருத்துவம், குழந்தைகள் நலம், பிரசவம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு மருத்துவர்கள் இல்லாமல் உள்ளது. பணியில் மொத்தம் 5 மருத்துவர்களே ஒட்டு மொத்த மருத்துவமனைக்குமாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 2 பேர் எலும்பு பிரிவுக்காகவும், மற்றவர்கள் எம்.பி.பி.எஸ் முடித்தவர்களாகவும், மயக்கவியல் மருத்துவர்களாகவும் உள்ளனர்.

குழந்தைகள், பிரசவம், இருதயம், கண் என சிறப்பு பிரிவுக்கான சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர்கள் இல்லாததால் தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். பெரியகுளம் பகுதியில் இருந்து அரசினர் மருத்துலக் கல்லூரி செல்லும் நோயாளிகளை அங்குள்ள மருத்துவர்கள் பெரியகுளத்தில் மாவட்டதலைமை மருத்துவமனை இருக்கும்போது ஏன் இங்கு வருகிறீர்கள் என கேலிசெய்யும் நிலையும் உள்ளது. பலநூறு கோடி மதிப்பீட்டில் கட்டுமான வசதிகளுடன் உள்ள மாவட்ட தலைமை அரசினர் மருத்துவமனைககு உரிய மருத்துவர்களை நியமிக்க வேண்டிய சுகாதாரத்துறை அலட்சியமாக உள்ளதால், போதிய மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவமனையில் சாதாரண காய்ச்சல், தலைவலிக்கு மட்டும் மாத்திரைகள், மருந்து அளிக்கப்படுகிறது. இதனால் வெகுதொலைவில் இருந்து வரும் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை முழுமையாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : District Chief Hospital ,Dentist ,
× RELATED சாக்கோட்டையில் இலவச சித்த மருத்துவ முகாம்