×

ஆயக்குடியில் பரபரப்பு குடிபோதையில் மகனின் மண்டையை உடைத்த தந்தை

பழநி, பிப். 28:  ஆயக்குடியில் குடிபோதையில் மகனின் மண்டையை தந்தை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழநி அருகே ஆயக்குடி, 3வது வார்டைச் சேர்ந்தவர் கதிர்வேல் (42). கூலித்தொழிலாளி. இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், ரித்திக்ரோஷினி (13) என்ற மகளும், சக்திவடிவேல் (11) என்ற மகனும் உள்ளனர். கதிர்வேலுக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் குடித்துவிட்டு வந்த கதிர்வேல் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் தமிழரசி கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் இதே தெருவில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டனர். நேற்று காலை பள்ளி செல்வதற்கு சீருடை எடுப்பதற்காக ரித்திக்ரோஷினியும், சக்திவடிவேலும் தங்களது வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போதும் கதிர்வேல் போதையில் இருந்ததாக தெரிகிறது. போதையில் இருந்த கதிர்வேல் குழந்தைகள் இருவரையும் தாக்க முற்பட்டுள்ளார். அப்போது வீசிய செங்கல் சக்திவடிவேலின் தலையில் அடிபட்டது. இதில் மண்டை உடைந்த சக்திவடிவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சக்திவடிவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆயக்குடி போலீசார் கதிர்வேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கஞ்சா விற்ற இருவர் கைது