×

கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் விலை உயர்ந்தும் தண்ணீர் பிரச்னையால் வெற்றிலைக்கு சீரான விலை இல்லை

கரூர், பிப்.28.  கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் வெற்றிலை விலை உயர்ந்தாலும் சீரான விலை இல்லாதது மற்றும் தண்ணீர் பிரச்னையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணாயபுரம் வட்டாரத்தில் வெற்றிலை பயிர் சாகுபடி நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு வெற்றிலை அனுப்பப்படுகிறது. இளம்பயிர் வெற்றிலை ஒருகவுளி ரூ.45 முதல் ரூ.50 வரை விலைபோகிறது. மொத்த வியாபாரத்தில் 100 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.4500 முதல் ரூ.5000 வரை விற்பனையாகிறது. முதிர்கால் வெற்றிலை ரகம் ஒரு கவுளி ரூ.35 முதல் ரூ.40 எனவும், ஒருசுமை ரூ.3500 முதல் ரூ.4ஆயிரம் வரையிலும் விலைபோனது. பல மாதங்களுக்கு பிறகு வெற்றிலையின் விலை உயர்ந்துள்ளது. எனினும் கடும் வறட்சியை எதிர்நோக்கி இருப்பதால் தண்ணீர் பிரச்னையை சமாளித்து முதலீட்டை எடுக்க வேண்டுமே என கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வெற்றிலைக்கு சீரான விலை கிடைப்பதில்லை. சாகுபடி செலவு போக வெற்றிலையை கிள்ள கூலியாக ரூ.500 கொடுக்கிறோம். ஆனால் சமயங்களில் ஒரு சுமையே ரூ.800க்குத்தான் விலைபோகும். ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து வெற்றிலை சாகுபடியில் இழப்புத்தான் ஏற்படுகிறது. தலைமுறைகளாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளதால் வேறு வழியின்றி ஈடுபட்டு வருகிறோம். தொடர்ந்து பாசன வாய்க்கால்களில் நீர் கிடைத்ததாலும், பனிப்பொழிவால் அதிக அளவு தளர்ச்சி இருந்ததாலும் உற்பத்தி அதிகரித்தது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், கொடிக்காலுக்கு தினமும் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே தண்ணீர் பிரச்னையால் இழப்பைத்தான் சந்திக்க வேண்டியதிருக்கிறது. கட்டுப்படியான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். நெல்கொள்முதல் செய்தைப்போல வெற்றிலையை கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

Tags : Krishnarayapuram ,
× RELATED கிருஷ்ணராயபுரம் அருகே விவசாயி வீட்டில் கொள்ளை