×

நிலக்கோட்டை பகுதியில் ரூ.2 ஆயிரம் விண்ணப்ப பூர்த்திக்கு கட்டாய வசூல் பொதுமக்கள் புகார்

செம்பட்டி, பிப். 28: நிலக்கோட்டை பகுதியில் ரூ.2 ஆயிரம் வாங்குவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் பணிக்கு ரூ.100 கட்டாய வசூல் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு வறுமைக்கோட்டு பட்டியலில் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 19 98, 2003, 2005ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் அடிப்படையில் மனுக்களை வாங்கி வந்தனர். இதில் வசதி படைத்தவர்கள் இருப்பதாக கூறி கடந்த 2 நாட்களாக பொதுமக்களிடம் புதிதாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில்தான் தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கணக்கெடுக்கும் பணியில் அந்தெந்த ஊராட்சி மன்ற செயலாளர்கள்தான் ஈடுபட வேண்டும். ஆனால் அவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டமான 100 நாள் வேலை செய்யும் பணிதள பொறுப்பாளர்களை வைத்து கணக்கெடுத்து வருகின்றனர்.

இவர்கள் இலவசமாக பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க தலா ரூ.100 கட்டாய வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக நிலக்கோட்டை அருகே மாலையகவுண்டன்பட்டி, குல்லக்குண்டு, பள்ளபட்டி ஊராட்சியில் கணக்கெடுக்கும் பணிதள பொறுப்பாளர்கள் இந்த புகாருக்கு ஆளாகியுள்ளனர். இதனால் ஏழை, எளிய மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நிலக்கோட்டை யூனியன் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இலவசமாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nilkottai ,area ,public ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி