×

தஞ்சை பேருந்து நிலைய வளாகத்தில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய தாய்மார்கள் பாலூட்டும் அறை போதிய பராமரிப்பு இல்லை கண்டுகொள்ளாத போலீசார் பயன்பாடின்றி கிடக்கும் அவலம்

தஞ்சை, பிப். 28: தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் குடிமகன்களின் கூடாரமாக தாய்மார்கள் பாலூட்டும் அறை மாறி வருகிறது. போதிய பராமரிப்பு இல்லாததால் பயன்பாடின்றி கிடக்கிறது. இதை போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தாய்மார்கள் நலன்கருதி தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  திறந்து வைத்தார். இதற்காக பல கோடிக்கணக்கான  ரூபாய்கள் செலவு செய்யப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தாய்மார்கள்  பாலுட்டும் அறை, தஞ்சை பழைய பஸ் பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் குடிமகன்களில்  புகழிடமாக மாறியுள்ளது. முறையாக பராமரிப்பு செய்யாமல் விட்டதால் காலை  நேரங்களில் பஸ்ஸ்டாண்டில் பிச்சை எடுப்பவர்கள் தூங்குவதற்கும், தங்களது  பழைய துணிமூட்டைகளை வைத்து கொள்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த  பாலூட்டும் அறையை சுற்றி பலவிதமான விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது. இதுகுறித்து தஞ்சை சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் வெங்கட்ராமன் கூறியதாவது:   2015ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும்  குடிநீர் வழங்கல் துறை மற்றும் குடும்ப நலத்துறை இணைந்து பஸ்ஸ்டாண்டில்  நீண்ட நேரம் காத்திருக்கும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு  பாலூட்டுவதற்கு வசதியாக ஒரு அறை ஏற்படுத்தப்பட்டது.

இந்த அறையால்  தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு நிம்மதியாக, பாதுகாப்பாக பாலுட்டி வந்தனர்.  காலப்போக்கில் இந்த அறை முறையாக பராமரிப்பு செய்யாமல் விட்டதால் இரவு  நேரங்களில் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதற்கும், குடிமகன்கள் பார்போல்  பயன்படுத்துவதற்கும் வசதியாக அமைந்துள்ளது. இந்த அறையை  சுற்றி வெறும் விளம்பர போஸ்டர்கள் மட்டுமே ஒட்டப்படுகிறது. தாய்மார்கள்  நலனுக்காக திறக்கப்பட்ட பாலூட்டும் அறையை சமூகவிரோத செயல்பாடுகளுக்கு  பயன்படுத்துவதை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இனிவரும் காலங்களில்  இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம் நிறுவனத் தலைவர் சதா சிவக்குமார் கூறுகையில், தாய்மார்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் வரும்போது பஸ்ஸ்டாண்டில் பஸ் வரும் வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த நேரத்தில் அந்த குழந்தைக்கு பசி ஏற்பட்டு அழும். அப்போது பொது இடத்தில் வைத்து தாய்மார்கள் பாலூட்ட அச்சம் அடைவார்கள். இதனால் குழந்தையின் பசியை போக்க முடியாத நிலை ஏற்படும். இதை தடுக்கவே மறைந்த முதல்வர், நல்ல நோக்கோடு அவரும் ஒரு பெண் என்பதால் எல்லா பஸ்ஸ்டாண்டுகளிலும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்க செய்தார். அவர் இருக்கும் வரை பாலூட்டும் அறை இருந்தது. அவர் மறைந்தார் பாலூட்டும் அறையெல்லாம் மறைந்துவிட்டது.

பாலூட்டும் அறை இன்று சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்படுகிறது. இதை யார் கேட்பது. விளம்பர போஸ்டர்கள் ஒட்டுவதற்கும், குடிமகன்களின் பாதுகாப்பான மதுகூடமாகவும் (பார்) பயன்படுகிறது. இரவு நேரங்களில் இந்த இடத்தில் சொல்வதற்கே நா கூசும் செயல்கள் நடக்கிறது. இது எல்லாம் போலீசாருக்கும் தெரியும், அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால் கண்டு கொள்வதில்லை. ஏனெனில் திட்டம் கொண்டு வந்தவரே மறைந்துவிட்டார். அதன்பின்னர் அதை பற்றி நமக்கு என்ன கவலை. பாலூட்டும் அறை வழியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்றால்கூட அது என்னவென்று கூட கேட்காமல் செல்லும் நிலையில் தான் இன்று உள்ளது என்றார்.

சுகாதார சீர்கேடு

தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்டில் உள்ள  தாய்மார்கள் பாலூட்டும் அறையின் உள்ளே தாய்மார்கள் செல்வதற்கே அச்சம்  அடைகின்றனர். பகல் நேரங்களில் அந்த பகுதியில் பிச்சை எடுப்பவர்கள் தங்களது  பழைய துணிகளை வைத்து கொண்டு சாப்பிட்ட இலைகள் எல்லாவற்றையும் வீசி  சென்று விடுகின்றனர். மிகவும் சுகாதார கேடாக உள்ள இந்த தாய்மார்கள்  பாலூட்டும் அறையை எப்படி தாய்மார்கள் பயன்படுத்துவர்.

Tags : Mothers ,bus shelter maternity room ,Tanjore ,No ,
× RELATED கர்ப்பிணி தாய்மார்கள் வெயிலில் வெளியே செல்வதை தவிருங்கள்