×

மணல் கொள்ளையர்களுக்கு சாதகமாக செயல்பட்டவர் தாசில்தார் மீது கொடுக்கப்பட்ட புகார் மனு மாயமான அதிசயம்

தஞ்சை, பிப். 28: தஞ்சை மாதாக்கோட்டை ரோடு வள்ளலார் நகரை சேர்ந்தவர் கோவிந்தராசு (60). இவர் கடந்தாண்டு டிசம்பர் 24ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார். அதில், தஞ்சை தாசில்தார் அருணகிரி தனது அலுவலகத்தில் பெரும்பாலான நேரங்களில் இருப்பதில்லை. இதனால் கோரிக்கை மனுக்கள் கொடுக்க முடிவதில்லை. மணல் திருட்டில் ஈடுபடும் மாட்டுவண்டி, லாரிகளை பிடித்து பேரம்பேசி விட்டு விடுகிறார். இதுகுறித்து தாசில்தாரிடம் கேட்டால் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது. அதனால் எச்சரிக்கை செய்து அனுப்பி விடுகிறேன் என்கிறார். ஆனால் விசாரித்தால் அவரிடம் உதவியாளராக இருக்கும் கோவிந்தன் மூலம் மணல் திருட்டில் ஈடுபடுவோரிடம் பேரம்பேசி விடுவிப்பது தெரியவருகிறது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.    

இவ்வாறு மனு கொடுத்து 3 மாதமாகியும் கோவிந்தராசுக்கு எவ்வித பதிலும் வரவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்த போது கம்ப்யூட்டரில் பதிவு செய்த ரசீதை காட்டி இந்த மனு மீதான நடவடிக்கை எதுவும் இல்லை. இந்த மனு எந்த துறை அதிகாரிக்கு சென்றுள்ளது என்று கோவிந்தராசு கேட்டார்.     
அப்போது, அங்கிருந்தவர்கள் அறை எண் 110க்கு செல்லுமாறு கூறினர். அங்கு சென்றால் இஜே பிரிவுக்கு செல்லுங்கள் என்றனர். அங்கு சென்றால் இந்த மனுவை பார்த்து விட்டு மேலாளரை பார்க்குமாறு கூறினர். மேலாளரை பார்த்தால் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பார்க்குமாறு கூறினர். அந்த அலுவலகத்துக்கு சென்றபோது அவர் அலுவலக ரீதியான பணியில் இருக்கிறார்.

எனவே அவரை 2 நாட்களுக்கு பார்க்க முடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் மீண்டும் கோவிந்தராசு மனு பதிவு செய்யும் இடத்துக்கு சென்று கேட்டபோது நாங்கள் கடந்த 2 மாதத்துக்கு முன்பு வாங்கிய மனுவை இன்னும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யவில்லை. மனு எங்கிருக்கிறது என்று தெரியவில்லையென கூறினர். இந்த பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்த கோவிந்தராசு, வேறுவழியில்லாமல் எனது மனுவை காணவில்லையென தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் தெரிவித்து அதற்குரிய பதிலை பெற்று கொள்கிறேன் என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். இதுகுறித்து கோவிந்தராசு கூறுகையில், நான் கடந்த 3 மாதத்துக்கு முன் கொடுத்த மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கலெக்டர் மீது எனது மனுவை தொலைத்த காரணத்துக்காக வழக்கு தொடரவும் தயங்க மாட்டேன் என்றார்.

Tags : complainant ,
× RELATED ஊழல் புகாருக்கு ஆளான ராகேஷ்...