×

ஜிப்மர் ஒதுக்கிய நிதியில் காரைக்கால் அரசு மருத்துவமனை விரைவில் மேம்படுத்தப்படும் புதுச்சேரி அமைச்சர் தகவல்

காரைக்கால், பிப்.28: காரைக்கால் அரசு மருத்துவமனை, ஜிப்மர் நிதியை கொண்டு விரைவில் மேம்படுத்தப்படும் என, புதுச்சேரி நலத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.காரைக்கால் மாவட்ட அரசு பொதுமருத்துவமனை கடந்த பல ஆண்டுகளாக கோமா நிலையில் இருப்பதாகவும், அதனை உடனே சீரமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி காரைக்கால் கிளையில் உள்ள மாணவர்கள், காரைக்கால் அரசு மருத்துவமனையை பயன்படுத்தி கொள்ளும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனையை சீர்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்தது. இருந்தும், காரைக்கால் அரசு மருத்துவமனையை சீரமைக்கும் பணி தொடங்காமலே இருந்துவந்தது. மேலும், காரைக்கால் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி கிளை ஏனம் பிராந்தியத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, காரைக்கால் போராட்டக்குழு குற்றம் சாட்டிவந்தது.

தொடர்ந்து, புதுச்சேரி நலத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், நேற்று முன்தினம் காரைக்கால் வந்தார். புதுச்சேரி நலவழித் துறை இயக்குனர் டாக்டர் ராமன், காரைக்கால் மாவட்ட அரசு மருத்துவமனை அதிகாரிகள், மாநிலப் பொது பணித் துறை, மத்திய பொதுப் பணித் துறை அதிகாரிகளுடன் மருத்துவமனையை நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஆய்வைத் தொடர்ந்து, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் கூறியது: காரைக்கால் மாவட்ட அரசு பொதுமருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் ஒதுக்கிய ரூ.30 கோடியில், முதல் கட்டமாக 22.5 கோடி செலவில், கட்டிடஙக்ளை புனரமைக்க முறையான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியில், மருத்துவமனைக்கு தேவையான உபகரணஙக்ள் வாங்க பயன்படுத்தப்படும். வரும் ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்கும். மேலும், 48 செவிலியர்கள் நியமனம் செய்யவும், காலியாக உள்ள ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.   

Tags : minister ,Puducherry ,government hospital ,Karaikal ,Jibmer ,
× RELATED புதுச்சேரியில் உடல் பருமன்...