×

2 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் முறைகேடு அரசு பஸ்சை சிறைபிடித்து திமுகவினர் சாலை மறியல் ராணிப்பேட்டை அருகே பரபரப்பு

ராணிப்பேட்டை, பிப். 28: ராணிப்பேட்டை அருகே 2ஆயிரம் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறி அரசு பஸ்சை சிறைபிடித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தமிழக முதல்வர் எடப்பாடி ஏழை எளிய மக்களுக்கு 2 ஆயிரம் நிதி வழங்குவதாக சட்டசபையில் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் 65 லட்சம் ஏழைகள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பயன்பெறுவோர் குறித்து பட்டியல் தயாரித்து வந்தனர். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள நவ்லாக் ஊராட்சியில் 40 ஆயிரம் பேர் உள்ளனர். இங்குள்ளவர்களில் ₹2 ஆயிரம் உதவித்தொகை பெற தகுதியான ஏழைகளின் பெயர் பட்டியலை தயார் செய்யும் பணி அதிமுக ஒன்றிய துணை செயலாளரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

அவர், அதிமுகவை சேர்ந்தவர்கள், அரசு வேலையில் இருப்பவர்கள் மற்றும் தங்களுக்கு வேண்டிய வசதியானவர்கள் பெயர்களை பட்டியலில் இடம்பெற செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஏழை, எளிய மக்களின் பெயரை சேர்க்கவில்லை என பொதுமக்களும், திமுகவினரும் குற்றம் சாட்டினர். இதை கண்டித்து நவ்லாக் ஊராட்சியை சேர்ந்த திமுகவினர் அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து நேற்று புளியங்கண்ணு கிராமத்தில் அரசு பஸ்சை சிறைபிடித்து 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து பஸ்சை மறியலில் ஈடுபட்டவர்கள் விடுவித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : road picket road ,Ranipettai ,
× RELATED சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு...