×

திருப்பத்தூர், வாணியம்பாடி உட்பட 4 இடங்களில் டைல்ஸ் ஷோரூம் அதிபர் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி ரெய்டு

திருப்பத்தூர், பிப்.28: திருப்பத்தூர், வாணியம்பாடி உட்பட 4 இடங்களில் டைல்ஸ் ஷோரூம் அதிபர் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி ஆவணங்களை கைப்பற்றி மேற்கொண்ட விசாரணையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் 300 கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக ஜோலார்பேட்டையில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம், வீடு உட்பட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் டைல்ஸ் ஷோரூம்களில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதன்விவரம் வருமாறு:

வேலூர்மாவட்டம் ஆம்பூர் மேட்டுக்கொல்லையைச் சேர்ந்தவர் சுபியான்(42), தொழிலதிபர். இவர் ரியல் எஸ்டேட், டைல்ஸ் விற்பனை ஷோரூம் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான திருப்பத்தூர் புதுப்பேட்டையில் உள்ள டைல்ஸ் ஷோரூம், வாணியம்பாடி வளையாம்பட்டு ஷோரூம், பேரணாம்பட்டு, குடியாத்தம் உள்ளிட்ட 4 இடங்களில் உள்ள ஷோரும்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 20 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 11.30 மணியளவில் தனித்தனி குழுவாக பிரிந்து சென்று ஒரே நேரத்தில் அதிரடியாக நுழைந்தனர்.

தொடர்ந்து ஷோரூம்களை வருமானவரித்துறையினர் தங்களது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தனர். பின்னர் ஷோரூம் கதவுகளை அடைத்துவிட்டு டைல்ஸ் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள், வரவு-செலவு கணக்குகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். இரவு 7 மணி வரையில் நடந்த இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் பறிமுதல் செய்த ஆவணங்கள் தொடர்பாக வருமானவரித்துறையினர் தொழிலதிபரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அமைச்சரின் வீடு உட்பட 31 இடங்களில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தி ஒரு வாரம் முடிவதற்குள் வேலூர் மாவட்டத்தில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tiles Showroom chairperson ,locations ,Revenue Officers Action Raid ,Tirupathur ,Vaniyambadi ,
× RELATED மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் 10 இடங்களில் தீவிர சோதனை