×

மஞ்சூர்-கோவை சாலை சீரமைப்பு பணி துவக்கம்

மஞ்சூர், பிப்.27: மஞ்சூர்-கோவை சாலை சீரமைப்பு பணி துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு சாலை வசதி உள்ளது. நீண்ட காலமாக போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வரும் இச்சாலையை சீரமைத்து ஊட்டி-கோவை இடையே மூன்றாவது பாதையாக மாற்றப்படும் என கடந்த ஆறாண்டுகளுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது.
ஆனால், இதுவரை இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் முடங்கியிருந்தது. ஏற்கனவே இந்த சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்ட நிலையில் தற்போது மேலும் சீர்குலைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. குறிப்பாக ஓணிக்கண்டி முதல் வெள்ளியங்காடு வரை சாலையின் இருபுறங்களிலும் முட்ெசடிகள் புதர்போல் வளர்ந்து சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இதனால், சாலை குறுகலாக காணப்பட்டதுடன் ஒரு வாகனம் மட்டுமே சென்று வர முடிந்தது.மேலும் சாலையில் பெரும்பாலான இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து பெரிய அளவில் குழிகள் ஏற்பட்டுள்ளதால், இவ்வழியாக செல்லும் வாகனங்களில் டயர் பஞ்சர் மற்றும் இயந்திர கோளறுகள் ஏற்பட்டு நடுவழியில் நின்று விடுவது வாடிக்கையாக இருந்தது.

இதையடுத்து மஞ்சூர்-கோவை சாலையை சீரமைக்க பொதுமக்கள்  வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மஞ்சூர் முதல் வெள்ளியங்காடு வரை சாலை சீரமைப்பு பணிக்காக ரூ.47 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் எவ்வித சாலை சீரமைப்பு பணியும் மேற்கொள்ளப்படவில்லை.    இது குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன் ‘தினகரன்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பெரும்பள்ளம் பகுதியில் இருந்து வெள்ளியங்காடு வரை 22கி.மீ சாலை சீரமைப்பு பணிக்கான பூமி பூஜை போடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பெரும்பள்ளத்தில் இருந்து மஞ்சூர் வரையிலான சாலை சீரமைப்பு பணிகளும் துவங்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்ட நாட்களுக்கு பின் மஞ்சூர்-கோவை சாலை சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Manjur-Coimbatore ,
× RELATED மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்கள், வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்