×

வனத்துறையில் தீயணைக்கும் பயிற்சி பெற்றவர்கள் இல்லாததால் 200 ஏக்கர் வனம் சாம்பல்

கோவை, பிப்.27: ேகாவை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை காட்டு தீயால் 200 ஏக்கர் வனம் சாம்பலாகியுள்ளது. வனத்துறையில் காட்டு தீயை அணைக்கும் பயிற்சி பெற்றவர்கள் இல்லாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ேகாவை வனகோட்ட பகுதி 627 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. இதில் 170 சதுர கி.மீ வனப்பகுதி எவர் கிரீன் பாரஸ்ட் ஆக உள்ளது. மீதமுள்ள வனப்பகுதி மழை காலத்திற்கு ஏற்ப வளமாகவும், வறட்சியாகவும் மாறும் தன்மை ெகாண்டதாக உள்ளது. கடந்த சில நாட்களாக வாளையார் புதுப்பதி, சின்னம்பதி, மோளபாளையம், அண்ணா நகர், அய்யாசாமி மலை, கரடிமடை, மருதமலை, ஆனைகட்டி தூவைப்பதி, அனுவாவி சுப்ரமணியர் கோயில் வனம், வெள்ளிங்கிரி மலை, பாலமலை உள்பட பல்வேறு இடங்களில் வனத்தில் தீ பரவி வருகிறது. பல இடங்களில் தீபிடித்து எரிவது வனத்துறையினருக்கு தெரியவில்லை. இரவு நேரத்தில் உச்சி மலைகளில் தீ பிடித்து எரியும் போது மட்டுமே தீ பரவியுள்ள விவரங்கள் தெரியவருகிறது.

 இரவில் தீ பிடித்து எரியும் இடத்திற்கு சென்று வனத்துறையினர் தீயை அணைக்க முயற்சிப்பதில்லை. பகல் நேரத்திலும் புகை மண்டலத்தில் தீ காட்டிற்குள் சென்று தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர். கோவை வன கோட்டத்தில் 100 கி.மீ தூரத்திற்கு 3 மீட்டர் அகலத்தில் தீ தடுப்பு கோடு அமைக்கப்பட்டது. பெயரளவிற்கு மட்டுமே பணிகள் நடந்த வனத்திலும் அடிக்கடி தீப்பிடிக்கிறது. தீ பிடிக்கும் காடுகள் தொடர்பாக ‘சாட்டிலைட்’ உதவியுடன் தகவல் கிடைத்ததாலும் தீ தடுப்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்படவில்லை. வனத்தில் தீ பிடித்தால் தீயணைப்பு துறையினர் செல்ல மறுக்கின்றனர். தீயணைப்பு வாகனங்களை வனப்பகுதிக்கு கொண்டு சென்று அணைக்க முடியாது. காட்டு தீ அணைக்கும் வசதிகள் தங்களிடம் இல்லை என தீயணைப்பு துறையினர் தெரிவித்து விட்டனர்.   கோவை வன கோட்டத்தில் 30க்கும் மேற்பட்ட தீ தடுப்பு ஊழியர்கள் பயர் பைட்டர் பணியிடம் காலியாக இருக்கிறது.

கோட்ட அளவில் 12 ஊழியர்கள் மட்டுமே வனத்தில் ஏற்படும் தீயை அணைக்கும் பயிற்சி பெற்றுள்ளனர்.  வன ஊழியர்கள் பெரும்பாலானாவர்கள் காற்றின் திசை, வேகத்திற்கு ஏற்ப காட்டிற்குள் சென்று தீயை அணைக்கும் பயிற்சி பெறவில்லை. இதனால் இந்த ஆண்டு இதுவரை சுமார் 200 ஏக்கர் வனப்பகுதி தீயால் சாம்பல் காடாக மாறி விட்டது.  இது தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், ‘‘ வனப்பகுதி வழியாக ரயில் பாதை, ரோடு செல்கிறது. வன எல்லையில் மேய்ச்சல் நிலங்கள் இருக்கிறது. சிலர் பட்டா நிலங்களில் ேகாரை புற்களில் தீ வைக்கும் போதும், ரோடு வழியாக  செல்லும் போது பீடி, சிகரெட் புகைத்து வீசி செல்வதாலும் தீ பிடிக்கிறது. வனத்தில் தீ வைத்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தை முன்னிட்டு வனத்தில் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, ’’
என்றனர்.

Tags : forest area ,firefighters ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள்...