×

திருச்சி மாநகரில் 3க்கு3 7க்கு 2 மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரம் ஆய்வுக்கு சென்ற பள்ளியில் சிஇஓ அதிர்ச்சி

திருச்சி, பிப்.27:  திருச்சி மாநகரில் 3 மாணவர்களுக்கு மூன்று ஆசிரியர்கள், 7 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் பணியாற்றி வரும் பள்ளிகளை கண்டு ஆய்வுக்கு சென்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிர்ச்சியடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாநகரில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இது தவிர தனியார் மெட்ரிக் பள்ளிகளும், சிபிஎஸ்சி, இன்டர்நேஷனல், மான்டிசேரி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகள் இயங்கி வருகின்றன. தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு விளம்பர யுக்திகளை, கவர்ச்சிகர திட்டங்களை செயல்படுத்தி மாணவர்களை சேர்க்கின்றன. பெற்றோர்களும் தங்களது குழந்தைகளின் மீது கொண்ட அதீத அக்கறையால் தாங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்காமல், தொலைவில் உள்ள சர்வதேச தரத்தில் உள்ள பள்ளிகளில் சேர்த்து அழகு பார்க்கின்றனர்.

ஆங்கிலக் கல்வி மோகம், புற்றீசல் போல அதிகரித்த நர்சரி மற்றும் தனியார் பள்ளிகள் மாணவர்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கல்வி சேவைக்காக துவங்கப்பட்ட பல்வேறு அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று நலிவடைந்து உள்ளன. திருச்சி மாநகரில் சில பள்ளிகளில் மிகவும் குறைந்தளவு மாணவர் எண்ணிக்கையுடன் இயங்கி வருகின்றன. இது தொடர்பாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் சமீபத்தில் மாநகர் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். சத்திரம் பஸ் நிலையம் அருகே சங்கரன்பிள்ளை ரோட்டில் கூடப்பள்ளி செல்லமணி அம்மாள் நடுநிலைப்பள்ளியில் 3 மாணவர்களுக்கு, 3 ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். இதைக் கண்டு சிஇஓ ராமகிருட்டிணன் அதிர்ச்சியடைந்தார். அதேபோல, உறையூர் ராமலிங்காநகரில் அரசு உதவி பெறும் தொடக்கபள்ளியில் 7 மாணவர்களுக்கு, 2 ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்தனர்.

இதுபோல குறைவான மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் குறித்து ஆய்வு நடத்த வட்டாரக் கல்வி அலுவலர் (பிஇஓ) ஜெயலட்சுமிக்கு சிஇஓ ராமகிருட்டிணன் உத்தரவிட்டார். அதன்பேரில் பிஇஓ ஜெயலட்சுமி இதுபோன்ற பள்ளிகளில் ஆய்வு நடத்தி வருகின்றார். தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல்படி தொடக்கப்பள்ளிக்கு 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர், உயர்நிலைப்பள்ளிக்கு 35 மாணவர்களுக்கு 1 ஆசிரியர், மேல்நிலைப்பள்ளிக்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம் இருக்க வேண்டும். அந்த விகிதாச்சாரப்படி பெரும்பாலான பள்ளிகள் இல்லை என்பது தான் உண்மை. கூடப்பள்ளி செல்லமணி அம்மாள் பள்ளி நிர்வாகி கூறுகையில், ‘ஆங்கில மீடியும் இல்லாததால் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது. ஆங்கில மீடியம் துவங்க அனுமதி கோரியுள்ளோம். அனுமதி வந்தால் அதிக மாணவர்களை சேர்த்து மீண்டும் பழைய நிலைக்கு பள்ளியை கொண்டு செல்வோம்’ என்றார்.

Tags : city ,Trichy ,
× RELATED சரக்கு போக்குவரத்தை ஒருங்கிணைக்க...