×

தஞ்சை மாவட்டத்தில் பதற்றமான 104 வாக்குச்சாவடிகளில் போதிய பாதுகாப்பளிப்பது அவசியம் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

தஞ்சை, பிப். 27: தஞ்சை மாவட்டத்தில் பதற்றமான 104 வாக்குச்சாவடிகளில் போதிய பாதுகாப்பளிப்பது அவசியம் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். தஞ்சை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக கையாளுவது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. எஸ்பி மகேஸ்வரன் வரவேற்றார். கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பேசியதாவது: தஞ்சை மாவட்டத்தில் 2287 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் காவலர்கள் கண்காணிப்பு பணியை கண்ணும் கருத்துமாக மேற்கொள்ள வேண்டும். தேர்தல் காலத்தில் புகார்கள் செய்வற்காக தேர்தல் ஆணையம் 1950 என்ற புதிதாக இலவச அழைப்பு எண்ணை அறிமுகம் செய்துள்ளது. தொலைபேசியில் தொடர்பு கொள்ள விரும்பினால் பின்கோடு போட தேவையில்லை. செல்போனில் தொடர்பு கொண்டால் அந்தந்த மாவட்டத்தின் பின்கோடு போட வேண்டும்.

குறிப்பாக தஞ்சை மாவட்டத்துக்கு 04362 1950 என்ற எண்ணில் டையல் செய்து புகார்களை தெரிவிக்கலாம். அவ்வாறு புகார் தெரிவித்த 24 மணி நேரத்துக்குள் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தெரிவித்தால் நமக்கு எந்த தொகுதியில், எந்த பாகத்தில் வாக்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதேபோல் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், அலுவலர்கள், அந்த வாக்குப்பதிவு மையம் கூட்டமாக உள்ளதா அல்லது கூட்டம் குறைவாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்திய தேர்தல் ஆணையம் தற்போது புதிதாக சி விஜில் என்ற ஆப் அறிமுகம் செய்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் சென்று இந்த புதிய ஆப்பை டவுன் லோடு செய்து கொள்ளலாம். தேர்தல் காலங்களில் திருமணம் நடத்துவதாக கூறி திருமண மண்டபம் பதிவு செய்வார்கள்.

ஆனால் அங்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி டோக்கன் வழங்குவது அல்லது பிரியாணி விருந்து வைப்பது நடைபெறும். இதுபோன்ற புகார்கள் வந்தால் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு செல்லும்போது அங்கிருப்பவர்கள் ஓடிவிடுவர். அவ்வாறு ஓடிவிட்டால் சி விஜில் என்ற ஆப் மூலம் அங்கு நடந்த சம்பவங்களை வீடியோவாக பதிவு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி விட வேண்டும். அவ்வாறு அனுப்பினால் தேர்தல் ஆணையம் இதையே ஒரு ஆதாரமாக வைத்து சம்பந்தப்பட்ட கட்சி மீது நடவடிக்கை எடுக்கும். இதை பொதுமக்களும் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு செல்போன் அல்லது எஸ்எம்எஸ் வாயிலாக புகார்கள் வரும். இவ்வாறு வரும் புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்களை பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மிரட்டி வாக்களிக்க வைப்பதை தடுக்க வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் 104 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் போதுமான அளவுக்கு போலீசார், துணை ராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றார். ஏடிஎஸ்பி பாலச்சந்திரன், ஆர்டிஓ சுரேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி  நடப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார்  தயக்கம் காட்டக்கூடாது. வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு  முன்னதாக அனைத்து டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இதை போலீசார் உறுதி செய்ய  வேண்டும். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நேரத்தில் யாராவது மொத்தமாக  மது வாங்கி செல்வது தெரியவந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.

பிடிவாரண்ட் பிறப்பித்தும் ஆஜராகாத 347 குற்றவாளிகள்
தஞ்சை மாவட்டத்தில் தொடர்ச்சியாக  பிடிவாரண்ட் பிறப்பித்தும் ஆஜராகாமல் 347 குற்றவாளிகள் இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அடையாளம்  கண்டுகொள்ள வேண்டும். இதுபோல் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை  முன்னதாக கண்டு அவர்கள் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஒரு  வாக்குச்சாவடியில் திடீரென 10க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர்  சேர்க்கப்பட்டால் அந்த வாக்காளர்கள் யார் என்பது குறித்து முறையாக விசாரணை  நடத்த வேண்டும். ஏனெனில் இவர்கள் அந்த வாக்குச்சாவடியில் முறைகேடுகளில்  ஈடுபட வாய்ப்புள்ளது.

Tags : district ,Tanjore ,police officers ,
× RELATED படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி...