×

பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து தாராசுரம் மார்க்கெட்டில் வழிந்தோடும் கழிவுநீர்

கும்பகோணம், பிப். 27: பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் கழிவுநீர் வழிந்தோடி வருவதால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு தேன்கனிக்கோட்டை, பழனி, ஓசூர் உள்ளிட்ட வெளிமாவட்ட, வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றி கொண்டு தினம்தோறும் ஏராளமான லாரிகள் வந்து செல்கிறது. இதேபோல் நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் தாராசுரம் காய்கறி மார்க்கெட் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக காய்கறி மார்க்கெட் அருகில் உள்ள சாலையில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் சாலையில் உள்ள உணவு விடுதிகள், டீக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களை உரிமையாளர்கள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் ஏற்படும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். காய்கறி கடைகளுக்கும் கழிவுநீர் செல்லும் அபாயம் உள்ளது. எனவே தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து வெளியேறும் கழிவுநீரை தடுத்து நிறுத்துவதுடன் மேன்ஹோலை விரைந்து சீரமைக்க வேண்டுமென  வியாபாரிகள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Darasuram ,
× RELATED பக்தர்கள் நேர்த்திகடன் தாராள அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா