×

வேட்டைக்கு செல்லும் மன்னர்கள் ஓய்வெடுப்பதற்காக கட்டியது மானோஜிப்பட்டியில் சிதிலமடைந்து வரும் உப்பரிகை மண்டபம் 1,000 ஆண்டுகளை கடந்தும் கம்பீரம் புதுப்பித்து சுற்றுலா தலமாக்கப்படுமா?

தஞ்சை, பிப். 27: வேட்டைக்கு செல்லும் மன்னர்கள் ஓய்வெடுப்பதற்காக 1,000 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை மானோஜிப்பட்டியில் கட்டப்பட்ட உப்பரிகை மண்டபம் சிதிலமடைந்து வருகிறது. இதை புதுப்பித்து சுற்றுலா தலமாக மாற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மானோஜிப்பட்டியில் உள்ள உப்பரிகை மண்டபம் நீலகிரி தோட்டத்துக்கு உட்பட்ட பகுதியாகும். தஞ்சையை மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் நீலகிரி தோட்டம் மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்தது. கோடைகாலத்திலும் கூட நீலகிரியை போல் குளிர்ச்சியாக இந்த பகுதி இருந்து வந்ததால் தான் நீலகிரி தோட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. தஞ்சையை ஆட்சி செய்த மன்னர்கள் வரிசையில் நாயக்க மன்னர்களும், மாராட்டிய மன்னர்களும் விலங்குகளை வேட்டையாட இந்த பகுதிக்கு தான் செல்வர். அப்படி வேட்டையாட செல்லும்போது வேட்டைக்கு பின்னர் ஓய்வெடுப்பதற்காக இந்த உப்பரிகை மண்டபத்தை கட்டியுள்ளனர். உப்பரிகை என்றால் மேல்மாடி அல்லது மேல்மாடம் என்று பொருள். சுட்ட செங்கற்கள், சுண்ணாம்பு காரையை பயன்படுத்தி எந்த ஒரு அறிவியல் தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் மிக நேர்த்தியாக இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தில் ஏறுவதற்கு தென்பகுதியில் 18 கருங்கல் படிக்கட்டுகள் உள்ளது. இந்த மண்டபத்தில் 12 ஜன்னல்கள் உள்ளது. உள்புறத்தில் பிரமாண்டமான வட்ட வடிவிலான ஒரு மண்டபமும் உள்ளது. இதை சுற்றிவர நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது 8 தூண்கள் அமைத்து மேல்தளம் கட்டப்பட்டுள்ளது. மண்டபத்தில் உள்புற மேல்தளத்தில் ராமரின் பட்டாபிஷேக காட்சிகள் அழகிய சுதை சிற்பமாக இடம் பெற்றுள்ளது. மேற்புறத்தில் தாமரை பூ மொட்டு வடிவில் கூம்புடன் கூடிய வடிவ கோபுரம் உள்ளது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த இந்த உப்பரிகை மண்டபம் சிதிலமடைந்து வருகிறது. இந்த பகுதியில் வசிப்பர்கள் இந்த உப்பரிகை மண்டபத்தில் மேல் ஏறி இதன் பெருமை தெரியாமல் மது அருந்தும் இடமாக மாற்றி வருகின்றனர். இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறும்போது, தஞ்சையை ஆட்சி செய்த சோழ மன்னர்களுக்கு பின்னர் நாயக்கர்களும், மாராட்டியர்களும் தஞ்சையை ஆட்சி செய்தனர். இவ்வாறு தஞ்சையை ஆட்சி செய்த நாயக்க மற்றும் மாராட்டிய மன்னர்கள் வேட்டையாடுவதற்கு தாங்கள் ஆட்சி செய்த பகுதியை ஒட்டியிருந்த நீலகிரி தோட்டத்துக்கு தான் செல்வர்.

இந்த பகுதி அடர்ந்த காடுகள் நிறைந்து இருக்கும். நீலகிரி எவ்வாறு குளர்ச்சியாக இருக்கிறதோ அது போல் இந்த பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் தான் இந்த பகுதிக்கு நீலகிரி தோட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தஞ்சையை ஆட்சி செய்த மன்னர்கள் நீலகிரி தோட்டத்துக்கு சென்று வேட்டையாடிய பின்னர் ஓய்வெடுப்பதற்காக மிகவும் உயரமான பாதுகாப்பு நிறைந்த ஒரு கட்டிடம் காட்டின் நடுவில் தேவை என்பதை உணர்ந்து கட்டினர். இவ்வாறு கட்டப்பட்ட கட்டிடம் ஏதே பெயரளவுக்கு இல்லாமல் மிகவும் நேர்த்தியாக கட்டியுள்ளது தான் தமிழக கட்டிடக்கலை மரபை இன்றும் நமக்கு உணர்த்துகிறது. எந்த ஒரு அறிவியல் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் இப்படி ஒரு மண்டபத்தை மன்னர்கள் கட்டியுள்ளனர். மேலும் ஓய்வெடுக்கும்போது நேரம் போவது தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ராமரின் பட்டாபிஷேக காட்சிகளை அழகிய சுதை சிற்பமாக வடிவமைத்து அதை ரசித்து வந்துள்ளனர்.

இந்த காலத்தில் எப்படி நாம் டிவி போன்றவற்றை பார்த்து ரசிக்கிறோமோ அதுபோல் அன்றைய காலத்தில் இவ்வாறு சிற்பங்களை வடிவமைத்து அதை ரசித்து வந்துள்ளனர். இவ்வாறு சிறப்பு பெற்ற இந்த உப்பரிகை மண்டபம் இன்று சிதிலமடைந்து வருகிறது. மேல் பகுதியில் முட்செடிகள் படர்ந்து மண்டபத்தை சேதப்படுத்தி வருகிறது. பகல் நேரங்களில் மது அருந்தும் இடமாகவும், இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்களின் புகழிடமாகவும் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த மண்டபத்தை தொல்லியல் துறை கையில் எடுத்து புனரமைப்பு செய்து பாதுகாக்க வேண்டும். இதை ஒரு சுற்றுலா தலமாக அறிவித்து கோடை காலத்தில் தஞ்சை வரும் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று இந்த மண்டபத்தில் தங்க வைத்து அதன் குளிர்ச்சியை அனுபவிக்க செய்ய வேண்டும். அப்போது தான் நமது கட்டிட பெருமை தெரியும்.

ஆனால் தொல்லியல் துறையாக இருந்தாலும் சரி,சுற்றுலா துறையாக இருந்தாலும் சரி எங்கிருந்து வருமானம் வரும் என்பதை கணக்கில் எடுத்து கொண்டு அதை சீர் செய்து அதை பராமரிப்பு செய்வதிலேயே கவனம் செலுத்துகிறது. இதுபோன்ற பழமைவாய்ந்த மண்டபங்களை கண்டுபிடித்து அதை பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டும். அப்போது தான் வரலாற்று பொக்கிஷங்களை பாதுகாக்க முடியும் என்றனர். வெப்பத்தின் தாக்கம் தெரியாது
சுட்ட செங்கற்கள் மற்றும் சுண்ணாம்புக்காரையை கொண்டு கட்டியுள்ள கட்டிடம் 1,000 ஆண்டுகளை கடந்து இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. இந்த கட்டிடத்தில் நாயக்கர் கால மற்றும் மராட்டியர் கால கலை பாணிகள் காணப்படுகிறது. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபம் பிற்காலத்தில் மராட்டியர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் யார் கட்டியது என்ற தகவல் இல்லை. கோடை காலத்தில் எவ்வளவு வெப்பம் நிலவினாலும் இந்த கட்டிடத்தில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் குளிர்ச்சியாகவே இருக்கும்.

Tags : kings ,
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...