×

யாரும் பயன்படுத்தாத மகளிர் சுகாதார வளாகத்தை சுய உதவிக்குழுவிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

திருப்போரூர், பிப்.27: பயன்படுத்தாமல் உள்ள தையூர் மகளிர் சுகாதார வளாகத்மைத, மகளிர் சுய உதவிக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். திருப்போரூர் ஒன்றியம் தையூர் ஊராட்சியில் பொது மக்களின் வசதிக்காக மகளிர் சுகாதார வளாகம் கடந்த 2011 - 2012ம் ஆண்டு புனரமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் நோக்கத்தில், இந்த சுகாதார வளாகம் கட்டும் திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஒவ்வொரு வீடுகளிலும் மான்ய உதவித் திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டவும் நிதியுதவி செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே கழிப்பறையை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டியதால், அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இதனால், பொதுக் கழிப்பறையை பயன்படுத்துவதை மக்கள் நிறுத்தி விட்டனர்.

ஆனாலும், தையூர் ஊராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. இவற்றிற்கான கட்டுமானப் பணியில் பல வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்கியுள்ள குடியிருப்புகளில் கழிப்பறை வசதியில்லை. எனவே, ஊராட்சியில் யாரும் பயன்படுத்தாமல் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை, மகளிர் சுய உதவிக்குழுவிடம் ஒப்படைத்தால், வடமாநில கட்டுமான தொழிலாளர்கள் பயன்படுத்த முடியும். இதன் மூலம் திறந்தவெளியில் மலம் கழிப்பதை 100 சதவீதம் தடுக்க முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : SHG ,
× RELATED சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்